சட்டமன்ற தொகுதி - இடைத்தேர்தல் அறிவிப்பு... தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் ஈரோடு கிழக்கு
|ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி வரும் பிப்ரவரி 27 என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4- ந் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதி காலியாக உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 11-ந் தேதி அறிவித்தது.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதி வரும் பிப்ரவரி 27 என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த தொகுதியில், 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
அங்கு 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 876 வாக்காளர்கள் உள்ளனர். ஈரோடு நகராட்சி ஆணையர் சிவகுமார், தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு கூறியுள்ளார். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
இதன்படி, அந்த மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை அரசு வெளியிட முடியாது. அங்கு பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். பொருட்கள், பணம் கொண்டு செல்லும் போது பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும். அதற்கான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.