திருச்சி
வியாபாரியிடம் பணம் கேட்டு கார் கண்ணாடி உடைப்பு; 3 திருநங்கைகள் கைது
|வியாபாரியிடம் பணம் கேட்டு கார் கண்ணாடி உடைக்கப்பட்டது தொடர்பாக 3 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை:
திருச்சியை அடுத்த துவாக்குடிமலை அண்ணா வளைவு பகுதியை சேர்ந்தவர் செல்வம்(வயது 43). வியாபாரி. இவரும், இவரது நண்பரான அந்தோணியும் நேற்று முன்தினம் ஒரு காரில் திருச்சி ஓயாமரி சுடுகாடு அருகே சென்றனர். அப்போது சாலையின் ஓரமாக நின்ற 3 பேர் காரை நிறுத்தி, மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். மேலும் அவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டி கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி பையில் வைத்திருந்த ரூ.500-ஐ பறித்துக் கொண்டு, கீழே கிடந்த கல்லை எடுத்து தனது காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கோட்டை போலீசில் செல்வம் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் விசாரணை நடத்தி, சஹானா என்ற சந்துரு(22), சாரா கருணாகரன் (24), ரோஷினி என்ற மணிகண்டன்(26) ஆகிய 3 திருநங்கைகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இதேபோல் திருநங்கை செரீனா (22) என்பவர், தனது தோழிகளுடன் ஓயாமரி சுடுகாடு அருகே நின்று கொண்டிருந்தபோது காரில் வந்த 2 பேர், தன்னையும் தன்னுடன் நின்ற தோழிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டி பாலியல் தொழிலுக்கு அழைத்து, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தயாளன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.