< Back
மாநில செய்திகள்
வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கேட்டு எம்.எல்.ஏ.வை சிறைப்பிடித்த பொதுமக்கள்:மண்டபத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு
தேனி
மாநில செய்திகள்

வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கேட்டு எம்.எல்.ஏ.வை சிறைப்பிடித்த பொதுமக்கள்:மண்டபத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு

தினத்தந்தி
|
27 Jun 2023 6:45 PM GMT

சின்னமனூர் அருகே, வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு அனுமதி கேட்டு எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர். மண்டபத்திற்குள் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறைப்பிடிப்பு

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, கால்நடைகள் சிறப்பு முகாம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த முகாமில் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது மலைமாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் அங்கு ஒன்று திரண்டு வந்தனர்.

அவர்கள் திடீரென எம்.எல்.ஏ.வை வழிமறித்தனர். பின்னர் மலைமாடுகளை வனப்பகுதியில் மேய்ப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறி அவரை முற்றுகையிட்டனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து விழா நடைபெற்ற மண்டபத்தின் கதவை பூட்டிக்கொண்டு எம்.எல்.ஏ.வை சிறைப்பிடித்தனர். இதையடுத்து அவருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மலைமாடுகள் மேய்ச்சல்

அப்போது தங்கள் ஊருக்கு தேவையான தண்ணீர், சாலை, சாக்கடை வசதி உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. மேலும் வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ப்பதற்கு வனத்துறையினர் அனுமதி மறுப்பதுடன், அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அடிப்படை வசதி செய்து தருவதுடன், மலைமாடுகள் மேய்ச்சலுக்கு அனுமதி பெற்று தர வேண்டும் என்று வாக்குவாதம் செய்தனர்.

பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தங்களது பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் சுமார் ¾ மணி நேரத்திற்கு பிறகு மண்டபத்தின் கதவை திறந்து எம்.எல்.ஏ.வை விடுவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்