திருச்சி
100 நாள் வேலை கேட்டு பஸ்கள் சிறைபிடிப்பு
|100 நாள் வேலை கேட்டு பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டது.
சமயபுரம்:
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி ஊராட்சியை சேர்ந்த திருப்பைஞ்சீலி, மூவராயன்பாளையம், வாழ்மால்பாளையம், கவுண்டம்பட்டி, ஈச்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பெண்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருப்பைஞ்சீலியை சேர்ந்த பெண்களுக்கு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் சரிவர வேலை வழங்கவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அவர்கள் முறையிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்று ஊராட்சி தலைவர் தியாகராஜன், மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் தொடர்ந்து வேலை கிடைக்காததால் ஆத்திரமடைந்த திருப்பைஞ்சீலியை சேர்ந்த ஏராளமான பெண்கள் நேற்று காலை சிவன் கோவில் முன்பு திரண்டனர். இதைத்தொடர்ந்து மூவராயன்பாளையம், வாழ்மால்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கிச்சென்ற அரசு பஸ்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருண்குமார், சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாமல் பெண்களின் போராட்டம் தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல்முருகன் மற்றும் மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி தலைவர் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, வருகிற வியாழக்கிழமை முதல் வேலை தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பஸ்களை விடுவித்து, பெண்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த திடீர் போராட்டத்தால் மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பெரும் அவதி அடைந்தனர்.