அரியலூர்
மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக கருத்து கேட்பு
|மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் இன்று கூட்டம் நடக்கிறது.
தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்துக் கருத்து கேட்பு கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருச்சி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 15-ந்தேதி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் சார்பாக கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் மாநில கல்வி கொள்கை சார்பான கருத்துக்களை சமர்ப்பிக்கப்படவுள்ளதால், மேற்கண்டவர்கள் மாநில கல்விக் கொள்கை சார்பான தங்களது கருத்துக்களை இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை மாநில கல்வி கொள்கைக்கான இணையதளத்திலும் அல்லது அருகாமையில் உள்ள உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது கருத்துகளை எழுத்துபூர்வமாக பெரம்பலூர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலருக்கு இன்றுக்குள் அனுப்பி வைக்குமாறும், மேலும் பெரம்பலூர் மாவட்ட அளவில் இன்று மதியம் 3 மணியளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாநில கல்வி கொள்கை சார்பான கருத்து கேட்பு கூட்டத்தில், தங்கள் கருத்தினை அறிக்கையாகவும், எழுத்து பூர்வமாகவும் நேரில் தெரிவிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.