< Back
மாநில செய்திகள்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் தம்பதியின் காரில் புகுந்த பாம்பு
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் தம்பதியின் காரில் புகுந்த பாம்பு

தினத்தந்தி
|
2 July 2023 12:45 AM IST

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர் தம்பதியின் காரில் புகுந்த பாம்ைப வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் டாக்டர் தம்பதியின் காரில் புகுந்த பாம்ைப வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

காருக்குள் புகுந்த பாம்பு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு குமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் அல்லாது நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இதனால் அங்கு எப்போதும் பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் மருத்துவக்கல்லூரியில் பணியாற்றி வரும் டாக்டர் தம்பதியினர் நேற்று வழக்கம் போல வேலைக்கு காரில் வந்தனர். பின்னர் பணி முடிந்து மதியம் வீட்டிற்கு புறப்பட தயாரானார்கள். அப்போது காரின் டிக்கியை திறந்தபோது அதற்குள் ஒரு பாம்பு புகுந்திருந்தது.

இதைப் பார்த்து டாக்டர்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதுபற்றி தீயணைப்பு நிலையத்திற்கும், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்களும், வனத்துறையினரும் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.

பிடிபட்டது

பின்னர் பாம்பானது காரில் இருந்து தப்பி ஓடி ஆஸ்பத்திரிக்குள் புகுந்துவிடக் கூடாது என்பதற்காக சம்பந்தப்பட்ட காரை வனத்துறை ஊழியர் ஒருவர் ஆஸ்பத்திரி வளாகத்தை விட்டு வெளியே ஓட்டி வந்தார். காரை வெளியே நிறுத்திவிட்டு கார் டிக்கியில் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அப்போது அந்த பாம்பு காருக்குள் இருந்து சீறிப்பாய்ந்தபடி வெளியே வந்தது.

இதனையடுத்து பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்தனர். அது கொம்பேறி மூக்கன் இனத்தை சேர்ந்த பாம்பு என வனத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட பாம்பை வனத்துறையினர் பாதுகாப்பான வனப்பகுதியில் விட்டனர். டாக்டர் தம்பதியின் காருக்குள் பாம்பு புகுந்த சம்பவம் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

---

மேலும் செய்திகள்