ராமநாதபுரம்
கண்மாயில் தண்ணீர் வறண்டு வருவதால் குவியல், குவியலாக செத்து மிதக்கும் மீன்கள்
|ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் வறண்டு வருவதால் குவியல், குவியலாக மீன்கள் செத்து மிதக்கின்றன.
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய கண்மாயில் தண்ணீர் வறண்டு வருவதால் குவியல், குவியலாக மீன்கள் செத்து மிதக்கின்றன.
பருவமழை
ராமநாதபுரம் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலய கண்மாய் 230 எக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு சக்கரக்கோட்டை கண்மாயானது பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த பறவைகள் சரணாலயத்திற்கு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் ஏராளமான பறவைகள் வர தொடங்கும்.
இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தில் உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து வாழ்ந்து வரும். கோடைகால சீசன் தொடங்குவதற்கு முன்பாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பறவைகள் அனைத்தும் திரும்பி சென்று விடும்.
வறண்ட கண்மாய்
கடந்த ஆண்டு பருவமழை சீசனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் அனைத்து பறவைகள் சரணாலயங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் பல பறவைகள் சரணாலயங்களுக்கும் பறவைகள் வராத நிலை இருந்தது. அதே நேரத்தில் ராமநாதபுரம் சக்கரக்கோட்டை கண்மாய் பறவைகள் சரணாலயத்தில் வைகை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருந்ததால் இங்கு மட்டும் ஓரளவு பறவைகள் வந்திருந்தன.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே ராமநாதபுரம் பகுதியில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகின்றது. மழையும் பெய்யாததால் சக்கரக்கோட்டை கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டிருந்த வைகை தண்ணீரும் வற்றிக்கொண்டே வருகிறது. தற்போது குட்டை போல ஆங்காங்கே தண்ணீர் காட்சியளிக்கிறது.
செத்து மிதக்கும் மீன்கள்
தண்ணீர் குறைந்து வருவதாலும், வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமலும் கண்மாயில் இருந்த கெளுத்தி, கெழுது உள்ளிட்ட பல வகையான மீன்கள் ஆங்காங்கே செத்து தண்ணீரில் மிதக்கின்றன. பல மீன்கள் வெயில் தாக்கத்தால் துள்ளி குதித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருக்கின்றன.
மேலும் கண்மாயில் ஆங்காங்கே மீன்கள் இறந்த நிலையில் கிடக்கின்றன. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இறந்து போன மீன்கள் தற்போது கருவாடாகி காய்ந்த நிலையில் குவியல் குவியலாக கண்மாய் பகுதியில் கிடக்கின்றன.