பெரம்பலூர்
குழந்தை கருவில் உருவாகும் போதே, அதற்கான பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது-சார்பு நீதிபதி பேச்சு
|குழந்தை கருவில் உருவாகும் போதே, அதற்கான பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுவதாக சார்பு நீதிபதி லதா கூறினார்.
சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் வழிகாட்டுதலின் பேரில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாலியல் வன்முறைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் குறித்து சட்ட அறிவு மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் ஆலத்தூர் தாலுகா பிலிமிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்காக நடைபெற்றது.
முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான லதா தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
பாலியல் குற்றங்கள்
குழந்தை கருவில் உருவாகும் போதே, அதற்கான பாதுகாப்பும் சட்டத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு கல்வி எந்தளவிற்கு அவசியமாகிறதோ, அதைபோல் அவர்கள் இச்சமூகத்தில் பாதுகாப்பாக வளர்வதை உறுதி செய்யும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை செய்யக்கூடியவர்கள் நமக்கு மிகவும் நெருங்கிய உறவினர்கள், தெரிந்தவர்களாகவே இருக்கிறார்கள். குழந்தைகளை தொட்டு பார்க்கக் கூடிய உரிமை குழந்தையின் தாய் மற்றும் தாயின் முன்னிலையில் டாக்டருக்கு மட்டுமே உள்ளது.
நாம் ஒவ்வொருவரும் பாலின வேறுபாடுகளை மறந்து சமத்துவமான எண்ணத்தில் நாம் குழந்தைகளை வளர்த்தெடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதற்காகவும், குற்றங்களை முற்றிலுமாக தடுத்திடும் வகையிலும் போக்சோ சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மரக்கன்றுகள்
இச்சட்டம் குறித்து பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பாதுகாப்பான சூழலை குழந்தைகள் உணர வேண்டும் என்பதே மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நோக்கமாக உள்ளது, என்றார்.
பின்னர் அவர் பொதுமக்களிடம் சட்ட உதவிக்கான மனுக்களை பெற்று, பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுபாப்பிற்காக மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இதில் பிலிமிசை ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி, தனியார் அறக்கட்டளையின் நிறுவனர் சிற்றம்பலம், பிலிமிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தம், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.