நாமக்கல்
பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை
|பாக்கெட்டுக்கு பதில் பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை சாத்தியப்படுமா? பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
ஆவின் நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் முதலில் பாட்டில்கள் மூலமே பால் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தது.
தற்போது ஆவின் நிறுவனம் கொழுப்புச் சத்து செறிவூட்டப்பட்ட பாலை ஆரஞ்சு நிற பாக்கெட்டிலும், நிலைப்படுத்தப்பட்ட பாலை பச்சை நிற பாக்கெட்டிலும், சமன்படுத்தப்பட்ட பாலை நீல நிற பாக்கெட்டிலும், இரு முறை கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலை மெஜந்தா நிற பாக்கெட்டிலும் தரம் பிரித்து, விற்பனை செய்து வருகிறது.
நாள் ஒன்றுக்கு தமிழ்நாடு முழுவதும் 27 ஒன்றியங்கள் மூலமாக 29 லட்சம் லிட்டர் பாலை, ¼, ½, 1 லிட்டர்களில் 63 லட்சம் பாக்கெட்டுகளை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
ஐகோர்ட்டு யோசனை
பால் பாக்கெட்டுகளை பயன்படுத்திவிட்டு, மீண்டும் திருப்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டமும் ஆவின் அறிவித்திருந்தது. தற்போது அந்த நடைமுறை மருவிப்போய்விட்டது.
இதனால் அன்றாடம் பயன்படுத்தும் 63 லட்சம் ஆவின் பால் பாக்கெட்டுகள் பயன்படுத்திய பிறகு, குப்பை மேட்டுக்கு வந்துவிடுகின்றன. இவ்வாறாக சேரும் பிளாஸ்டிக் கவர்கள் பெரிய சீரழிவை பிற்காலத்தில் தரக்கூடியது.
ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அது தொடர்பான வழக்கு விசாரணையில், சென்னை ஐகோர்ட்டு ஒரு யோசனையை தெரிவித்திருந்தது.
கண்ணாடி பாட்டிலில்...
ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு பதிலாக, கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும்படி, அரசு தரப்பு வக்கீலுக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கினார்கள்.
மேலும் முதற்கட்டமாக ஏதேனும் ஒரு மாநகராட்சி அல்லது ஒரு பகுதியைத் தேர்வு செய்து அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பாலை விற்பனை செய்வது குறித்து ஆலோசிக்கவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் பால்வளத்துறையிடமும், ஆவின் நிறுவனத்திடமும் கருத்துகளை கேட்பதாக, அரசு தரப்பு வக்கீல் நீதிபதிகளிடம் தெரிவித்தார். இந்த விசாரணை மீண்டும் வருகிற 8-ந் தேதி வர இருக்கிறது.
சென்னை ஐகோர்ட்டு கூறியிருக்கும் இந்த யோசனை சாத்தியப்படுமா? என்பது பற்றி பொதுமக்களிடமும், பால் முகவர்கள், வியாபாரியிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-
சாத்தியப்படாது
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலசங்கத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில்,
'ஆவின் பாலை பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாற்றுவது என்பது சாத்தியப்படாது. அதற்கு ஏற்றாற்போல், மிஷின், கட்டமைப்புகளை மாற்ற வேண்டும். வினியோகம் செய்வதற்கான நடைமுறையும் மொத்தமாக மாறிவிடும். பாட்டில் என்பதால், சேதாரமும் அதிகமாக இருக்கும். இதனால் பாலின் விலையும் உயரும்.
மீண்டும் அதே பாட்டிலை சுழற்சி முறையில் பயன்படுத்தும் நடைமுறை கொண்டுவரப்பட்டாலும், அதற்கான ஆட்கள் தேவை உயருவதோடு, கழுவி பயன்படுத்துவது சுகாதாரமாக இருக்குமா? என்பது கேள்விக்குறிதான். அதேப்போல், பால் முகவர்கள் வாங்கி இருப்பு வைப்பதிலும் சிரமம் ஏற்படும். குளிர்சாதன பெட்டியின் தேவையும், மின்சார கட்டணமும் அதிகரிக்கும். வியாபாரிகளும் இருப்பு வைத்து விற்கமாட்டார்கள். இதனால் நுகர்வோர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் பால் வினியோகம் என்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போய்விடும்' என்றார்.
வரவேற்கத்தக்கது
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ராஜேந்திரன் கூறியதாவது:-
ஆவின் தொடங்கப்பட்ட காலத்தில், அதாவது 1975-ம் ஆண்டு காலத்தில் ஆவின் பால் பாட்டிலில் தான் வினியோகம் செய்யப்பட்டது. சில இடர்பாடுகளை கருத்தில் கொண்டு பாக்கெட்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் ஆவின் பாலை பாட்டிலில் வினியோகம் செய்ய கோர்ட்டு ஆலோசனை கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.
எங்களை பொறுத்த வரையில் கிராமபுறங்களில் உற்பத்தி செய்யப்படும் பால், உரிய நேரத்தில் நகர்புற மக்களை சென்றடைய வேண்டும். தற்போது லட்சக்கணக்கான லிட்டர் பால் ஆவின் நிர்வாகம் சார்பில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இவற்றை பாட்டிலில் வினியோகம் செய்வதில் என்ன சிக்கல் வரும் என்பது நடைமுறைக்கு வரும்போது தான் தெரியவரும்.
மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்
நாமக்கல்லை சேர்ந்த காகித பை உற்பத்தியாளர் சந்திரன்:-
பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் பிளாஸ்டிக் ஒழிந்து விடாது. படிப்படியாக அதன் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அந்த வகையில் தற்போது ஐகோர்ட்டு ஆவின் நிர்வாகத்துக்கு கண்ணாடி பாட்டிலில் பாலை வினியோகம் செய்ய ஆலோசனை கூறி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
தினசரி லட்சக்கணக்கான ஆவின் பிளாஸ்டிக் பாக்கெட்டுகள் பூமிக்கு வருகின்றன. இதனால் எந்த அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை உணர்ந்து, பாட்டிலுக்கு மாற வேண்டும். இதேபோல் அரசின் ஒவ்வொரு துறையாக பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்.
கடினமான விஷயம்
எருமப்பட்டியில் பால் பாக்கெட் வியாபாரம் செய்யும் விஸ்வநாதன்:-
நான் நாளொன்றுக்கு 25 லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்து வருகிறேன். தற்போது ஆவின் பாலை பாட்டிலில் வழங்குவது குறித்து சென்னை ஐகோர்ட்டு கூறிய கருத்து வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் கடைகளில் அதை இருப்பு வைத்து விற்பனை செய்வது என்பது கடினமான விஷயம்.
பெரும்பாலான கடைகளில் அந்த அளவுக்கு போதிய இட வசதி உள்ள குளிர்சாதன பெட்டி இருக்காது. எனவே அதற்கு ஏற்றாற்போல் இடங்களை ஏற்படுத்த வேண்டிய நிலை வரும். மற்றபடி பாட்டிலில் ஆவின் பால் விற்பனை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான். சுற்றுப்புற சூழல் மாசுவடைவது குறையும் என்பதால் மக்களும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள்.
விலையை உயர்த்தக்கூடாது
எருமப்பட்டியை சேர்ந்த இல்லத்தரசி மகாலட்சுமி:-
ஆவின் நிர்வாகம் பாலை பாட்டிலில் கொடுத்தாலும் சரி, தற்போது உள்ள மாதிரியே பாக்கெட்டில் வினியோகம் செய்தாலும் சரி விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. கோர்ட்டு சுற்றுப்புற சூழல் மாசடைய கூடாது என்பதற்காக பாட்டிலில் பாலை வினியோகம் செய்யலாம் என யோசனை சொல்லி உள்ளது. அதற்காக பாட்டிலில் வினியோகம் செய்கிறோம் என கூறி பால் விலையை உயர்த்த கூடாது. இதே விலைக்கு பாட்டிலில் பாலை வினியோகம் செய்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்வார்கள்.
தற்போது பாக்கெட்டுகளை வினியோகம் செய்யும் நபர்கள் தூக்கி போட்டு விட்டு வேகமாக செல்கிறார்கள். பாட்டில் அமல்படுத்தப்பட்டால் காலி பாட்டில்களை சேகரிக்க வேண்டும். அப்படியானால் காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுமையாக மாறிவிடும்
கந்தம்பாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி கீர்த்தனா:-
நகர்புறங்களில் குழந்தைகளை வைத்திருக்கும் பெரும்பாலான தாய்மார்கள் ஆவின் பாலைதான் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கும் போது பிளாஸ்டிக்குக்கு பதிலாக கண்ணாடி பாட்டிலை கொண்டுவருவது குழந்தைகளின் உடல்நலனுக்கு பாதுகாப்பானதாகவே இருக்கும். எனவே ஐகோர்ட்டு யோசனை வரவேற்கத்தக்க ஒன்று தான். ஆனால் ஆவின் நிர்வாகம் பாக்கெட்டில் இருந்து பாட்டிலுக்கு மாறும் போது விலையை உயர்த்தக்கூடாது. ஏனெனில் பால் விலை கடுமையான உயர்வை சந்தித்து, அனைத்து தரப்பினரும் அவதி அடைந்து வரும் நிலையில், விலை உயர்த்தப்பட்டால் மேலும் சுமையாக மாறிவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.