அரியலூர்
சாதி பாகுபாடு இருக்கும் வரை நாடு வளராது; சீமான் பேச்சு
|சாதி பாகுபாடு இருக்கும் வரை நாடு வளராது என்று சீமான் கூறினார்.
பொதுக்கூட்டம்
அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று நாம் தமிழர் சட்சி சார்பில் எது சனாதன தர்மம்? என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல செயலாளர் நீலமகாலிங்கம் தலைமை தாங்கினார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சாதி பாகுபாடு
சனாதனம் என்பது இந்து மத கோட்பாடு இல்லை. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தலைவன் சனாதனத்தை பற்றி மேடையில் அரை மணி பேசினால் என் கட்சியை கலைத்து விடுகிறேன். நாட்டின் முதல் குடிமகள் ஜனாதிபதி திரவுபதி முர்மு கோவிலுக்குள் போக முடியவில்லை. இதுதான் உங்கள் சனாதனம். பெண்களுக்கான 33 சதவீதம் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றிய இடத்தில் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி இல்லை. இதுதான் இட ஒதுக்கீடா?.
சனாதனத்தை ஒழிப்பதை நிறுத்திவிட்டு முதலில் சாராயத்தை ஒழியுங்கள். சாதிய பாகுபாடு இருக்கும் நாடு வளராது. இந்த நாட்டில் இருக்கிற லஞ்சம், ஊழல், முறையற்ற நிர்வாகம், மது இது எல்லாவற்றுக்கும் ஒரே தீர்வு தி.மு.க.வை ஒழிப்பதே. நாடாளுமன்ற தேர்தலின்போது ஜெயலலிதா திருச்சியில் தலித் எழில்மலை என்ற ஆதி தமிழ்குடியை சேர்ந்தவரை நிறுத்தி வெல்ல வைத்தார். இது சனாதன ஒழிப்புக்கான முயற்சியாகும்.
திராவிட மாடல்
செப்டம்பர் 15-ல் அண்ணா பிறந்த நாளில் மகளிருக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்போகிறேன் என்று 6 மாதங்களுக்கு முன்பே விளம்பரப்படுத்தியது தான் திராவிட மாடல். இப்படி கொடுத்துவிட்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் சிலிண்டருக்கு 200 ரூபாயை குறைப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.