< Back
மாநில செய்திகள்
அரும்பாக்கத்தில் மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்து வந்த கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு
சென்னை
மாநில செய்திகள்

அரும்பாக்கத்தில் மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்து வந்த கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிப்பு

தினத்தந்தி
|
19 July 2022 10:56 AM IST

அரும்பாக்கத்தில் மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்துச்சென்ற கல்லூரி மாணவர்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

சென்னையில் கோடை விடுமுறை முடிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நேற்று முதல் தொடங்கியது. அதன்படி பச்சையப்பன் கல்லூரியின் 2 மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கியது.

அந்த கல்லூரி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கோயம்பேட்டில் இருந்து கல்லூரிக்கு மாநகர பஸ்சில் (தடம் எண் '53 பி') வந்தனர். அப்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பஸ்சின் பக்கவாட்டில் தாளம் தட்டி, பாட்டு பாடியபடி வந்தனர்.

அரும்பாக்கத்தில் பஸ் வந்தபோது, திடீரென பஸ்சில் இருந்து கீழே இறங்கிய சில மாணவர்கள், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பஸ்சின் முன்புறம் மற்றும் பக்கவாட்டில் நடந்து சென்றபடி பஸ்சை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

இதனால் சாலை காலியாக இருந்தும் மாணவர்களின் ஊர்வலம் காரணமாக மாநகர பஸ் மெதுவாக ஊர்ந்தபடி சென்றதால் அதற்கு பின்னால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரும்பாக்கம் பகுதியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் மாநகர பஸ்சை பின்தொடர்ந்தபடி ஊர்ந்து வந்தன.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அமைந்தகரை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும், மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்து வந்த கல்லூரி மாணவர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு மாநகர பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் யார்? என்பதை அடையாளம் கண்டு அவர்களை எச்சரிக்கை செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். கல்லூரி வகுப்பு திறந்த முதல் நாளிலேயே மாநகர பஸ்சை ஊர்வலமாக அழைத்து சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கல்லூரி மாணர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்