< Back
மாநில செய்திகள்
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம்

தினத்தந்தி
|
7 April 2023 4:34 PM IST

ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அருள்மிகு அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்து வணங்கினால் கல்யாணத் தடைகள் நீங்கும், வீடு-நிலம் கிடைக்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர நாளில் 100 ஆண்டுக்கு பின்பு சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இதையொட்டி அகத்தீஸ்வரர் கோவில் வண்ண மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. காலையில் நல்லெண்ணை, பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர், எலுமிச்சை, இளநீர், மாதுளை உள்ளிட்ட 27 வகை பொருட்களால் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், திருக்கல்யாண உற்சவத்திற்குத் தேவையான சீர்வரிசை பொருட்களை இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவிலிலிருந்து ஊர்வலமாக கிராம மக்களால் கொண்டு வந்தனர். மங்கல வாத்தியங்கள் முழங்க நேற்று முன்தினம் இரவு ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரருக்குத் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதன்பின்னர், இடப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், உற்சவத்திற்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பாக கல்யாண பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில், சிறுவாபுரியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்