< Back
மாநில செய்திகள்
ஆருத்ரா மோசடி வழக்கு: ரூ.500 கோடி வரை துபாயில் இயக்குனர்கள் பதுக்கல்
மாநில செய்திகள்

ஆருத்ரா மோசடி வழக்கு: ரூ.500 கோடி வரை துபாயில் இயக்குனர்கள் பதுக்கல்

தினத்தந்தி
|
7 Oct 2023 10:51 AM IST

ஆருத்ரா மோசடி வழக்கில் ரூ.500 கோடி வரை துபாயில் இயக்குனர்கள் பதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு மாதந்தோறும் 25 முதல் 30 சதவீதம் வரையில் வட்டி வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டது. இதனை உண்மை என்று நம்பி முதலீடு செய்தவர்களின் பணம் பறிபோனது.

இந்த நிறுவனம் சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2,438 கோடி மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் உள்பட 21 பேர் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் 13-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த மோசடியில் திரைப்பட நடிகர்- தயாரிப்பாளர் மற்றும் தமிழக பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். அனால் அவர் ஆஜராகவில்லை. தற்போது ஆர்.கே.சுரேஷ் துபாயில் இருக்கிறார். அவர் குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சார்பில் அனைத்து விமான நிலையங்களுக்கும் ஏற்கனவே 'லுக் அவுட்' நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் அந்நிறுவன இயக்குனர்கள் ரூ.500 கோடி வரை ஐக்கிய அமீரக நாட்டில் உள்ள துபாயில் பதுக்கி வைத்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே சொத்துகளை முடக்க துபாய் அரசுடன் எம் லாட் ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், அதை உடனடியாக அமல்படுத்த மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளனர்.

தற்போதுவரை மோசடி செய்யப்பட்ட பணத்தில் வாங்கிய பல கோடி மதிப்பிலான 127 சொத்துகளை கண்டறிந்து, அதில் 60 சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 102 கோடி ரூபாய் இருந்த வங்கி கணக்கை முடக்கி, ரூ.6.5 கோடி பணம், 6 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இண்டர்போல் உதவியுடன் துபாய் நாட்டில் பதுங்கி உள்ள இயக்குனர்களை பிடிக்க தீவிர முயற்சி செய்து வருகின்றனர்

மேலும் செய்திகள்