ராமநாதபுரம்
ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடக்கம்
|திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
திருஉத்தரகோசமங்கை,
திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மரகத நடராஜர் சன்னதி
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கையில் உள்ள ஸ்ரீமங்களநாதர்-மங்களநாயகி கோவிலில் மரகத நடராஜர் சன்னதி உள்ளது. இந்த மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று மட்டுமே திறக்கப்படும். சன்னதி திறக்கப்பட்ட அன்று மரகத நடராஜருக்கு பால், பன்னீர், திரவியம் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சந்தனாதி தைலம் பூசப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவிலின் சாமி சன்னதி முன்பு சாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் வைக்கப்பட்டு புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நடராஜர் சன்னதியில் உள்ள உற்சவர் சிலைக்கு காப்பு கட்டி திருவிழா தொடங்கியது.
32 வகை பொருட்களால் அபிஷேகம்
இந்த நிகழ்ச்சியில் திவான் பழனிவேல் பாண்டியன் கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ம் தேதி காலை 8 மணிக்கு கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதி திறக்கப்பட்டு நடராஜர் மீது பூசப்பட்ட சந்தனம் களையப்படுகிறது.
இதையடுத்து நடராஜருக்கு பால், பன்னீர், திரவியம் மாபொடி, மஞ்சள் பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர்.
மறுநாள் ஜனவரி 6-ந் தேதி அதிகாலை 3 மணியிலிருந்து மீண்டும் மரகத நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சூரிய உதய நேரத்தில் நடராஜர் மீது சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. அன்று மதியத்துக்கு மேல் மரகத நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது. மேலும் ஆருத்ரா திருவிழா தொடங்கியுள்ளதை தொடர்ந்து தினமும் இரவு நடராஜர் கோவில் சுற்றி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.