
புதுக்கோட்டை
சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

புதுக்கோட்டையில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.
ஆத்மநாதசுவாமி கோவில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி திருவாதிரை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது.
விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் மாணிக்கவாசகர் வீதி உலா வந்தார்.
ஆருத்ரா தரிசனம்
கடந்த 2-ந் தேதி குருத்தோலை சப்பரத்தில் இடபவாகனத்தில் வீதியுலாவும், 4-ந் தேதி தேரோட்டமும் நடைபெற்றது. தேரில் மாணிக்கவாசகர் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து கடந்த 5-ந் தேதி வெள்ளி ரதத்தில் மாணிக்கவாசகர் வீதியுலா வந்தார்.இந்நிலையில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நேற்று அதிகாலை சிவபெருமான் மாணிக்கவாசகர் சுவாமிக்கு உபதேசித்தருளிய உபதேசக்காட்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையடுத்து, வடக்களூர் ஆதிகைலாசநாதர் கோவிலில் நடராஜப்பெருமானுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று இரவு நடராஜப்பெருமான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வடக்களூரில் இருந்து புறப்பட்டு ஆவுடையார் கோவில் நான்கு ரதவீதிகளிலும் சுற்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின்னர் வடக்களூர் ஆதிகைலாசநாதர் கோவிலுக்கு சென்றடைந்தார்.
சாந்தநாத சாமி கோவில்
ஆருத்ரா தரிசனத்தையொட்டி புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி கோவிலில் நடராஜருக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. மேலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேப்போல் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் நடராஜர் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
சோழீஸ்வரர் கோவில்
பொன்னமராவதி ஆவுடைய நாயகி சமேத சோழீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிவனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குள நாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பட்டாடை உடுத்தி தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விராலிமலை முருகன் கோவில்
விராலிமலை முருகன் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதையொட்டி மலையடிவாரத்தில் உள்ள வாகன மண்டபத்தில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுடன் நான்கு ரத வீதிகளில் வீதியுலா நடைபெற்றது. முடிவில் மலையடிவாரத்தில் உள்ள சகடை மண்டபத்தில் கோபம் கொண்டு சென்ற அம்பாளை நடராஜர் சமாதானப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விராலிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.