< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
கரூர்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

தினத்தந்தி
|
7 Jan 2023 12:11 AM IST

கரூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

ஆருத்ரா தரிசனம்

கரூர் பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், தேன், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நடராஜர் வடிவில் சிவபெருமான் காலை தூக்கி நடனம் ஆடுவதைப்போல் சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மகா தீபாராதனை காட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் நடராஜர், அம்பாளுடன் சேர்ந்து சப்பாரத்தில் கோவில் உட்பிரகாரத்தில் உலா வந்தார்.

மட்டை அடி உற்சவம்

தொடர்ந்து நேற்று மதியம் மட்டை அடி உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நடராஜருக்கும், அம்பாளுக்கும் சிறு ஊடல் ஏற்பட்டதன் காரணமாக பசுபதீஸ்வரர் கோவிலில் தனித்தனியாக எழுந்தளினர். அப்போது அவர்களை சமாதானம் செய்யும் பொருட்டு சுந்தரமூர்த்திநாயனார் பல்லக்கில் வந்து அம்பாளிடம் முறையிட்டு சமாதானம் செய்தார். இதனை விளக்கும் விதமாக தண்டபாணிதேசிகர் சுந்தரராக தன்னை பாவித்து நடந்த நிகழ்ச்சிகளை கூறி தூது சென்றார். அப்போது 2-வது முறையாக சென்றபோது அம்பாளின் பணிப்பெண்கள் பூக்களால் சுந்தரரை அடிப்பது புராண வரலாறு ஆகும். அந்த வகையில் தூது சென்ற தண்டபாணி தேசிகருக்கு, வாழை மட்டையால் அடி விழுந்தது போல் அரங்கேற்றம் நடந்தது. அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரருடன் சேர்ந்து வந்து சுந்தரமூர்த்தி பேசும்போது அம்பாளின் கோபம் தணிந்து தெளிவு பெற்றார். பின்னர் நடராஜருடன் சேர்ந்து அவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்து தங்களது முதுகினை காட்டி வாழை மட்டையால் அடிவாங்கி சென்றனர். இதன்மூலம் குழந்தை செல்வம், வியாபாரம் விருத்தி உள்ளிட்டவை உண்டாகும் என்பது ஐதீகமாகும். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குளித்தலை

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சிவாயத்தில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி உடனுறை சிவபுரீசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமாள் பேரழகு உடையவர். இவருடைய ஆருத்ரா தரிசனக் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். இவரை வணங்கினால் தில்லை நடராஜரை தரிசித்த அதே பலனைப் பெறலாம் என்பது ஐதீகம்.

இந்தாண்டு இக்கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் இரவு மாணிக்கவாசகர் புறப்பாடு, சுந்திரசேகரர் சுவாமி நூறுகால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும். பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதையடுத்து நேற்று காலை பால், தயிர், நெய், தேன், எண்ணெய், பழங்கள் மற்றும் திரவியப்பொடிகள் உள்பட பல்வேறு பொருட்கள் கொண்டு நடராஜர் மற்றும் அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை மலர்களால் சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை சாமியின் வீதிஉலா நடைபெற்றது.

கடம்பவனேசுவரர் கோவில்

இதேபோல குளித்தலையில் உள்ள பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடராஜருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் நேற்று மதியம் பக்தர்கள் அனைவரும் இக்கோவிலுக்கு வெளியே அனுப்பப்பட்டனர். பின்னர் கோவிலின் பிரதான கதவு திறக்கப்பட்டு நடராஜ பெருமாள் அம்பாளுடன் பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி தந்தார். இதனை தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் சுவாமி வீதி உலா நடந்தது. சிவாயம் மற்றும் கடம்பவனேசுவரர் ஆகிய கோவில்களில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில் குளித்தலை மற்றும் இதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் உள்ள திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

லாலாபேட்டை

லாலாபேட்டையில் பிரசித்தி பெற்ற செம்பொற்சோதீஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆருத்ரா தரிசனத்தையொட்டி கோவிலில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிகள் திரளான பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

வேலாயுதம்பாளையம்

நஞ்சை புகழூர் மேகபாலீஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு காலையில் புனிதநீரால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி பல்லக்கில் அமர வைத்து கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்தது.

இதேபோல காகிதபுரம் காசிவிஸ்வநாதர், தோட்டக்குறிச்சி சொக்கநாதர், மண்மங்கலம் மணிகண்டேஸ்வரர் ஆகிய கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்