காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா
|காஞ்சீபுரம் சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.
கோவில் நகரம் என்ற பெருமைக்குரிய காஞ்சீபுரம் மாநகரின் மையப்பகுதியில் உலக புகழ் பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் விஷ்ணு பகவான் ஆமை வடிவத்தில் சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு. இத்தகைய புகழுக்குரிய இந்த கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி ஆண்டுதோறும் நள்ளிரவில் அங்குள்ள நடராஜருக்கும் சிவகாமி அம்மையாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த விழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நள்ளிரவு ஆருத்ராவையொட்டி 9 அடி உயரம் கொண்ட ஐம்பொன் நடராஜர் சிலைக்கு 48 வகையான வாசனை திரவியங்கள், 23 பழ வகைகள், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் மற்றும் பூக்கள் போன்றவற்றை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பிறகு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் பூவழகி தலைமையில் ஓதுவார் தமிழ்ச்செல்வன் முன்னிலையில் திருவாதிரை திருமுறை பாராயண நிகழ்ச்சியும் நடந்தது.
அதேபோல் பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமான காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கோவிலில் உள்ள நடராஜருக்கும், சிவகாமிக்கும் அதிகாலையில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. இதனை தொடர்ந்து சாமியும், அம்மனும் தனித்தனி தேரில் சிறப்பு அலங்காரத்தில் ராஜ வீதிகளில் வீதியுலா வந்தனர்.
அதேபோல் புகழ்பெற்ற முத்தீஸ்வரர், வழக்கறுத்தீஸ்வரர், கைலாசநாதர், மணிகண்டீஸ்வரர், புண்ணியகோட்டீஸ்வரர் உள்பட காஞ்சீபுரத்தில் பல்வேறு சிவாலயங்களில் உள்ள நடராஜருக்கு நேற்று முன்னதினம் நள்ளிரவில் பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகங்களும் அதனை தொடர்ந்து ஆருத்ரா தரிசனமும் நடைபெற்றது. விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து, அதிகாலை ஆருத்ரா தரிசனம் கண்டு மனமுருகி வணங்கினர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.