கரூர்
குளித்தலை கடம்பவனேசுவரர்-சிவாயம் சிவபுரீசுவரர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
|குளித்தலை கடம்பவனேசுவரர்-சிவாயம் சிவபுரீசுவரர் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
கரூர் மாவட்டம், குளித்தலை கடம்பவனேசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடந்த 28-ந் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து திருெவம்பாவை உற்சவத்தையொட்டி மாணிக்கவாசகருக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜர் முன்பு மாணிக்கவாசகர் இயற்றி பாடிய 21 திருவெம்பாவை பாடல்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலில் பாடப்பட்டது. அதுபோல் கோவிலிலிருந்து காலை, மாலை நேரங்களில் மாணிக்கவாசகரின் வீதிஉலா நடைபெற்றது. கோவிலை சுற்றியுள்ள 4 வீதிகளிலும் வீதி உலா நடந்தபோதும் திருவெம்பாவை பாடல் பாடப்பட்டது. அப்போது பொதுமக்கள் மாணிக்கவாசகரை வணங்கி சென்றனர். சோமாஸ்கந்தரின் ஊஞ்சல் உற்சவம் இன்று வியாழக்கிழமை இரவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து பிச்சாண்டவர் நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனமான நாளை (வெள்ளிக்கிழமை) காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், சாமியின் ஆருத்ரா தரிசனம் பின்னர் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
இதேபோல குளித்தலை அருகே சிவாயத்தில் உள்ள பெரியநாயகி உடனுறை சிவபுரீஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று இரவு மாணிக்கவாசகர் புறப்பாடு, சந்திரசேகரர் சாமி நூறுகால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும், பிச்சாடனமூர்த்தி நந்தவனம் அழித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசன விழா, சாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.