ஜாமீன் கேட்ட ஆருத்ரா நிறுவன அதிகாரிகள் - ஐகோர்ட்டு போட்ட அதிரடி உத்தரவு
|பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 11 பேரை கைது செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு சென்னை, திருவள்ளூர், ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆருத்ரா கோல்டு வர்த்தக நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் முதலீடுகளுக்கு அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி சுமார் ஒரு லட்சம் பேரிடம் இருந்து ரூ,2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்தது.
இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த நிறுவனத்தின் இயக்குனர் ரூசோ, கிளை மேலாளர்கள் அருண்குமார், ஜெனோவா உள்பட 11 பேரை கைது செய்தனர்.
இவர்களில், அருண்குமார், ஜெனோவா ஆகியோர் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டியிருப்பதாலும், பலர் தலைமறைவாகி உள்ளதாலும் மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிளை மேலாளர்களான அருண்குமார், ஜெனோவா ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.