தேனி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்:இல்லத்தரசிகள் கருத்து
|பெண்களுக்கு மாதம் ரூ.1.000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இல்லதரசிகள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், வயல்வெளிகளில் வேளாண் பணிகளில் ஈடுபடும் தாய்மார்கள், மீனவ மகளிர்கள், கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள், சிறிய கடைகள் மற்றும் சிறிய தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளத்துக்கு பணிபுரியும் பெண்கள் ஆகியோருக்கு மாதந்தோறும் ரூ.1,000 கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் இதுவரை எந்த மாநிலத்திலும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டது இல்லை. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதற்கு "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
ரூ.7 ஆயிரம் கோடி நிதி
இந்த புதிய திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து உள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்வதற்கான தகுதிகளை தமிழக அரசு வரையறை செய்து வெளியிட்டு உள்ளது.
அதில் பெண்கள், தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில்தான் உரிமைத்தொகை பெற விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று பல்வேறு பொருளாதார தகுதிகளும் வரையறுத்து வெளியிடப்பட்டு உள்ளன. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவதற்காக நடப்பு நிதி ஆண்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் இதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். ஒவ்வொரு ரேஷன் கடை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்களில் எத்தனை பேர், மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு தகுதியானவர்கள் என்பதை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந்தநிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து பெண்கள் என்ன சொல்கிறார்கள்? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
மகிழ்ச்சி
உத்தமபாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி சரண்யா கூறும்போது, 'தேனி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம். இங்குள்ள கிராமப்புற பகுதிகளில் இல்லத்தரசியாக இருந்தாலும் தோட்ட வேலைகளுக்கு சென்று வாழ்வாதாரம் தேடும் நிலையில் ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள். குறைந்த ஊதியத்துக்கு அன்றாடம் கஷ்டப்படும் பெண்கள் பலர் இருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட சூழலில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் அரசு மாதம் ரூ.1,000 வழங்குவதாக தெரிவித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உதவித்தொகை குடும்ப பொருளாதார சுமையை குறைக்க உறுதுணையாக இருக்கும்' என்றார்.
அனைவருக்கும் கிடைக்குமா?
கூடலூரை சேர்ந்த இல்லத்தரசி ஜெயா கூறும்போது, 'ஏழை, எளிய குடும்பங்களுக்கு இந்த ரூ.1,000 உரிமைத்தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விலைவாசி உயர்ந்துள்ள இந்த சூழலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்த தொகை பெரிய அளவில் உதவியாக இருக்கும். செப்டம்பர் மாதம் முதல் இந்த தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இதனால் பயனாளிகள் தேர்வு செய்யும் பணியை விரைவாக தொடங்க வேண்டும். இதற்கான கட்டுப்பாடுகள் விதித்து இருக்கும் போது அனைவருக்கும் கிடைக்குமா? என்று தெரியவில்லை. எனவே ஏழை, எளிய அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்' என்றார்.
வாழ்வாதாரத்துக்கு உதவி
பெரியகுளம் பங்களாபட்டியை சேர்ந்த இல்லத்தரசி சின்னம்மா கூறும்போது, 'அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தேர்தலின் போது அறிவித்தார்கள். இப்போது இதற்கு கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறார்கள். இதில் எந்தவித அரசியல் பாகுபாடும் இன்றி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்களுக்கு ரூ.1,000 கொடுப்பது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருக்கும்.
அதுவே ஆண்களுக்கு கொடுப்பதாக இருந்தால் பலரும் டாஸ்மாக் கடைகளுக்கு கொண்டு சென்று தான் செலவு செய்வார்கள். இதற்கு வீட்டு மின்கட்டண ரசீது கேட்கிறார்கள். வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு வீட்டின் உரிமையாளர்கள் எந்த மறுப்பும் சொல்லாமல் ரசீது கொடுக்க வேண்டும்' என்றார்.
உயர்த்தி வழங்கலாம்
கடமலைக்குண்டு தென்பழனி காலனியை சேர்ந்த இல்லத்தரசி கலைச்செல்வி கூறும்போது, 'கஷ்டப்படுகிற இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 கிடைக்க இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பே தருவதாக கூறினார்கள். ஆனால் தற்போதுதான் அதற்கான அறிவிப்புகளும் வெளியாகி பணிகளும் நடந்து வருகின்றன. இது தொடர்பான ஆவணங்களையும் கேட்டு உள்ளனர்.
ஆயிரம் ரூபாயை வைத்துக்கொண்டு இப்போது ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது. இருந்தாலும் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு செலவை தீர்க்க உபயோகமாக இருக்கும். அதற்காக தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். முதியோர் உதவித்தொகை, விதவைகள் உதவித்தொகை பெறுபவர்களுக்கு இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்கிறார்கள். அவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்கலாம். அல்லது முதியோர், விதவை உதவித்தொகையை உயர்த்தி வழங்கலாம்' என்றார்.
விலைவாசி உயர்வு
கம்பத்தை சேர்ந்த இல்லத்தரசி ஜானகி கூறும்போது, 'அரசு கொடுக்கும் இந்த உதவித்தொகை கஷ்டப்படும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே பல திட்டங்களில் மாதாந்திர உதவித்தொகை பெறுபவர்களுக்கு இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்ற நிலையில், விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இந்த ரூ.1,000 வைத்துக் கொண்டு ஒரு சமையல் கியாஸ் சிலிண்டர் கூட வாங்க முடியாது.
விலைவாசியை குறைத்தால் இந்த உதவித்தொகை இல்லாமல் கூட பல குடும்பங்களின் கஷ்டம் குறையும். ஏற்கனவே, விலைவாசி உயர்வு, கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் ரேஷன் அரிசி ஒதுக்கீடு பெறும் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்த உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்' என்றார்.