கரூர்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடக்கம்
|கரூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டன.
மகளிர் உரிமை தொகை திட்டம்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து கரூரில் நேற்று நடைபெற்ற விழாவில், கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு வங்கி ஏ.டி. எம். கார்டுகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.
கரூர் எம்.பி.ஜோதிமணி, எம்.எல்.ஏ.க்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது கலெக்டர் பேசுகையில், முதல்-அமைச்சர் மிகத் தெளிவாக இந்த திட்டத்தின் நோக்கத்தை கூறியிருக்கிறார். இதனை ஒரு தொகையாக வழங்காமல் மகளிருக்கான உரிமையாக அங்கீகரித்து வழங்கக்கூடிய இந்த திட்டம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டமாகும்.
ஏ.டி.எம் கார்டு எண்கள்
மாதந்தோறும் பணம் உங்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக வந்துவிடும். ஆகையால் யாராவது ஏ.டி.எம் கார்டு எண்கள் குறித்து கேட்டால் தகவல் அளிக்காதீர்கள். இது தொடர்பாக வங்கி அலுவலர்கள் தொடர்பு கொள்ள மாட்டார்கள். வங்கியில் இருந்து பெறப்பட்ட ஏ.டி.எம். கார்டுகளை நீங்கள் கவனத்துடன் கையாள வேண்டும். அதேபோல உங்களுக்கு எந்த சந்தேகங்கள் இருந்தாலும் ஏதாவது ஒரு குறையோ இருந்தால் நீங்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் இந்த அனைத்து அலுவலகங்களிலும் உங்களுக்காக உதவி மையம் அமைத்துள்ளோம். உங்களுடைய சந்தேகங்களை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம்.
வங்கி கணக்கில்...
அந்த எண்களில் தொடர்பு கொண்டு உங்களுடைய சந்தேகங்கள் எது வேண்டுமானாலும் தெரிவித்துக் கொள்ளலாம். மற்றபடி இந்த தொகை மாதம், மாதம் உங்களுடைய வங்கிக் கணக்கில் வந்து சேரும். நீங்கள் கொடுத்திருக்கக்கூடிய ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தப்படும் தொடர்ந்து கண்காணித்து அந்த பணத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வங்கிகளை சேர்ந்த அனைத்து அலுவலர்களும் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் இருந்தால் அவற்றை நீக்கி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.