கரூர்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவு 24-ந்தேதி தொடங்குகிறது-கலெக்டர் தகவல்
|கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்ப பதிவு 24-ந்தேதி தொடங்குவதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மகளிர் உரிமை தொகை
கரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட முகாம் அடுத்த மாதம் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெறும். ரேஷன் கடை பணியாளர், ஒவ்வொரு ரேஷன் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக வழங்குவார்.
டோக்கன் வழங்கும் பணி முகாம் நடைபெறும் 4 நாட்களுக்கு முன்பாக தொடங்கும். பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வரத்தேவையில்லை. குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடைப்பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
தகவல் பலகை
விண்ணப்பத்தை பெற்று கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய்த்துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத்தேவையில்லை.
விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு மற்றும் அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்படும்.
பயோமெட்ரிக் கருவி
விண்ணப்பப் பதிவு முகாமிற்கு வருகை புரியும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகை பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் வழியாக ஒரு முறை கடவுச்சொல் பெறப்படும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி இணைக்கப்பட்டு இருந்தால், அந்த கைபேசியை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறிப்பிடப்பட்டுள்ள நாளன்று விண்ணப்ப பதிவு முகாமிற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை சரிபார்ப்புக்கு எடுத்து வர கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077 மற்றும் கரூர் தாசில்தார் அலுவலகத்திற்கு 04324 -260745, அரவக்குறிச்சி தாசில்தார் அலுவலகத்திற்கு -04320 -230170, மண்மங்கலம் தாசில்தார் அலுவலகத்திற்கு -04324 -288334, புகழூர் தாசில்தார் அலுவலகத்திற்கு -04324 -270370, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு -04323 -243366, குளித்தலை தாசில்தார் அலுவலகத்திற்கு -04323 -222015, கடவூர் தாசில்தார் அலுவலகத்திற்கு -93840 94329 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.