< Back
மாநில செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நாளை தொடக்கம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நாளை தொடக்கம்

தினத்தந்தி
|
23 July 2023 12:31 AM IST

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 லட்சம் விண்ணப்பங்கள், டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது.

விண்ணப்ப படிவம்

கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கான திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படுவதற்கான விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 2 கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற உள்ளது. இதனால் முதற்கட்ட பகுதிகளுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகம் கடந்த 20-ந் தேதி தொடங்கியது.

புதுக்கோட்டை, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, மணமேல்குடி, இலுப்பூர், பொன்னமராவதி ஆகிய 7 தாலுகாவில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 454 விண்ணப்ப படிவங்கள், டோக்கன் வினியோகம் பணி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று வரை சுமார் 2 லட்சம் விண்ணப்பங்கள், டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டதாக அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) விண்ணப்ப படிவம், டோக்கன் வினியோகிக்கப்பட உள்ளது.

852 முகாம்கள்

இதைத்தொடர்ந்து விண்ணப்ப பதிவு முகாம்கள் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 597 அமைவிடங்களில் 852 முகாம்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பணி அடுத்த மாதம் ஆகஸ்டு 4-ந் தேதி வரை நடைபெறும். விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கு தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். பயோ மெட்ரிக் கருவி உள்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் குடும்ப தலைவி நேரில் வர வேண்டும். டோக்கனில் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய, வருவாய் துறையில் வருமான சான்று, நில ஆவணங்கள் போன்ற எவ்வித சான்றுகளையும் விண்ணப்பித்து பெறத்தேவையில்லை.

நடைபெறும் நேரங்கள்

விண்ணப்ப பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.

தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை செல்போன் செயலியில் தனியாக பதிவேற்றம் செய்வார்கள். இதற்காக அவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்