சென்னை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விண்ணப்பம் வினியோகம் - கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேட்டி
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற ஏதுவாக சென்னையில் இன்று முதல் அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும் விண்ணப்பம் வினியோகம் செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சியில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ரிப்பன் மாளிகையில் நேற்று மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மாவட்ட கலெக்டர் அருணா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் பணியை 2 கட்டமாக தொடங்க உள்ளோம். நாளை (அதாவது இன்று) முதல் ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக தெருவாரியாக விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 17 லட்சத்து 18 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் நாளை (இன்று) முதல் வழங்கப்பட உள்ளது. ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் அனைவருக்கும் வீடுதேடி வரும்.
ரேஷன் கடைகளில் உள்ள தகவல் பலகையிலும் இதுகுறித்த விவரங்கள் ஒட்டப்படும். சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் 98 வார்டுகளில் முதல் கட்டமாகவும், 102 வார்டுகளில் 2-ம் கட்டமாகவும் முகாம்கள் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியின் கீழ் 1,428 ரேஷன் கடைகள் உள்ளது. இதில் முதல் கட்டமாக 703 கடைகள், 2-ம் கட்டமாக 725 கடைகள் என பிரித்து வைத்துள்ளோம். 500 ரேஷன் அட்டைதாரருக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட உள்ளார். ரேஷன் கடைகளுக்கு பயோ மெட்ரிக் கருவிகள் வழங்கப்பட உள்ளது. 2 ஆயிரத்து 67 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையான பயோ மெட்ரிக் கருவிகள் கையிருப்பில் உள்ளது.
அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு இதுகுறித்த பயிற்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
பொதுமக்கள் அவசரப்படாமல் விண்ணப்பங் களை பெறவேண்டும். முதல் கட்டத்தில் விண்ணப்பங்கள் வரவில்லை என்றால், 2-வது கட்டத்தில் விண்ணப்பங்கள் வரும். டோக்கனில் குறிப்பிடப்படும் தேதியை பின்பற்றி ரேஷன் கடைகளுக்கு வந்தால் போதும். ரேஷன் அட்டைதாரர்கள் யாரும் விடுபடமாட்டார்கள். அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
எனவே, மக்கள் வீடுதேடி வரும் விண்ணப்பங்களை முழுமையாக பூர்த்தி செய்து வழங்கினால் போதும். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து இப்பணியை மேற்கொள்ள உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.