சென்னை
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்: விடுபட்டவர்களுக்காக 3 நாள் சிறப்பு முகாம்
|கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டோருக்கான சிறப்பு முகாம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது.
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தினை செயல்படுத்திட மொத்தம் உள்ள 1,428 ரேஷன் கடைகளில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,730 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த மாதம் 24-ந்தேதி முதல் கடந்த 4-ந்தேதி வரை நடைபெற்றன. மீதமுள்ள 724 ரேஷன் கடைகளில் 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு தன்னார்வலர் என்ற கணக்கில் 1,781 சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் கடந்த 5-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை இரண்டாம் கட்டமாக நடைபெற்றன. இதற்காக முன்கூட்டியே தேவையான விண்ணப்பங்கள் வீடு வீடாக சென்று குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டன. 2 கட்டங்களாக நடந்த முகாம்கள் மூலமாக 9,08,380 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் விடுபட்டவர்களுக்கு 18-ந்தேதி (இன்று) முதல் 20-ந்தேதி வரையிலான மூன்று நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும்.
ஏற்கனவே நடந்த இடங்களிலேயே இந்த முகாம்களும் நடைபெறும். இதுகுறித்த விவரங்கள் ரேஷன் கடைகளிலும் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பப் பதிவு செய்யும் பொழுது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் செய்ய வருவாய்த் துறையில் வருமானச் சான்று, நில ஆவணங்கள் போன்ற எந்த சான்றுகளும் தேவையில்லை.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு 044-25619208 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அந்தந்த மண்டல அலுவலக கட்டுப்பாட்டு எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.