புதுக்கோட்டை
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
|கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரிமளம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் டாக்டர் ராம்பிரகாஷ் முன்னிலை வகித்தார். முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அவர் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிட்டார். முகாமில் 1,038 பேர் சிகிச்சை பெற்றனர். இதில் 85 பேருக்கு இ.சி.ஜி.யு.ம், 112 பேருக்கு ஸ்கேன் பரிசோதனையும், 60 நபர்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாமில் முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் கீழ் மருத்து பெட்டகம் 12 பேருக்கும், மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டத்தின் கீழ் 15 பேருக்கு மருந்து பெட்டகங்களையும், தொழு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தொழு நோய் உபகரணங்கள் 2 பேருக்கும் அமைச்சர் ரகுபதி வழங்கினார். முன்னதாக பெருங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பழனிவேல்ராஜா முகாமின் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்க உரையாற்றினார். முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, துணை இயக்குனர் காசநோய் டாக்டர் சங்கரி, தெற்கு மாவட்ட மருத்துவ அணி பொறுப்பாளர் டாக்டர் சுதர்சன், ஒன்றிய குழு தலைவர் மேகலா முத்து, அரிமளம் பேரூராட்சி தலைவர் மாரிகண்ணுமுத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், லாரன்ஸ், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி நேர செவிலியர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பணியாளர்கள் செய்து இருந்தனர். முடிவில் பெருங்குடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுப ராஜேந்திரன் நன்றி கூறினார்.