< Back
மாநில செய்திகள்
திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் நாளை திறப்பு..!
மாநில செய்திகள்

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் நாளை திறப்பு..!

தினத்தந்தி
|
19 Jun 2023 8:54 AM IST

திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம் நாளை திறக்கப்படுகிறது.

திருவாரூர்,

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டு உள்ளது. இதில் கலைஞரின் உருவச்சிலை, அவரது தந்தையான முத்துவேல் நினைவு நூலகம், கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வகையில் அருங்காட்சியகம் மற்றும் கூட்ட அரங்கு உள்ளிட்ட கட்டமைப்புகள் இடம் பெற்றுள்ளன.

கலைஞர் கோட்டத்தின் திறப்பு விழா நாளை(செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. விழாவில் கவியரங்கம், பட்டிமன்றம், பாட்டு அரங்கம் உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன. நாளை காலை 10 மணிக்கு திருவாரூர் சகோதரிகளின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. தொடர்ந்து கவியரசு வைரமுத்து தலைமையில் கவியரங்கம் நடைபெறுகிறது. இதில் கவிஞர்கள் கபிலன், பா.விஜய், ஆண்டாள் பிரியதர்ஷினி, தஞ்சை இனியன் ஆகியோர் கவிதை வாசிக்கிறார்கள்.

மாலை 3.30 மணிக்கு மாலதி லஷ்மன் குழுவினரின் பாட்டரங்கம் நடைபெறுகிறது. தொடர்ந்து கலைஞர் கோட்ட திறப்பு விழா நடைபெற உள்ளது. தயாளு அம்மாள் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் வரவேற்று பேசுகிறாா். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் உருவச்சிலையை திறந்து வைக்கிறார். பீகார் முதல்- மந்திரி நிதீஷ்குமார் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்து பேசுகிறார். பீகார் துணை முதல்- மந்திரி தேஜஸ்வி யாதவ் முத்துவேல் நினைவு நூலகத்தை திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

இன்று(திங்கட்கிழமை) காலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் கோட்ட திறப்பு விழா ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிடுகிறார். மீண்டும் சன்னதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் தங்கும் அவர் நாளை நடக்கும் விழாவில் பங்கேற்கிறார். விழா நிறைவு பெற்ற பின் நாளை இரவு மன்னை எக்ஸ்பிரஸ் ெரயில் மூலம் சென்னை செல்கிறார். கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பங்கேற்க நாளை(செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் பீகார் முதல்- மந்திரி நிதீஷ்குமார், துணை முதல்- மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் திருச்சி வருகின்றனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் வருகின்றனர்.

மேலும் செய்திகள்