அரியலூர்
கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்
|அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சிவசங்கர் பரிசு வழங்கினார்.
கருத்தரங்கம்
அரியலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி சட்டமன்ற நாயகர் கலைஞர் என்ற தலைப்பில் 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் உடையார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரிகளில் முதல் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இதைத்தொடர்ந்து நேற்று 2-ம் நாள் கருத்தரங்கம், செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாகமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்திற்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, எம்.எல்.ஏ.க்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரொக்கப்பரிசு
கூட்டத்தில், அமைச்சர் மற்றும் தலைமை கொறடா ஆகியோர் கருணாநிதி குறித்தும், அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினர். தொடர்ந்து பகுத்தறிவு சீர்திருத்த செம்மல், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதி காவலர், பெரியார் வழியில் கலைஞர், பெண்ணுரிமை உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பேசினர். அவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும், முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு அமைச்சர் சார்பில் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.
விழாவில் சட்டப்பேரவை கூடுதல் செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல இணை இயக்குனர் தன்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஜெயங்கொண்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார், தி.மு.க. கழக சட்ட திருத்தக்குழு இணை செயலாளர் சுபா சந்திரசேகர், துணைத்தலைவர் கருணாநிதி உள்பட அரசியல் கட்சியினர், அதிகாரிகள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.