அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நாளை கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்குகள்
|கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்குகள் அரியலூர் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 'சட்டமன்ற நாயகர் கலைஞர்' என்ற குழு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் (ஒரு மாவட்டத்திற்கு 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் என்ற வகையில்) "நூற்றாண்டு விழா நாயகர் கலைஞர் சட்டமன்றத்தின் மூலம் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய சாதனைகளில் மாணவர்களை ஈர்த்தது" என்ற தலைப்பின்கீழ் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.
இதற்கென 4 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளடங்கிய துணைக்குழுவானது, அரியலூர் மாவட்டத்தில் 3 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளில் கருத்தரங்குகளை நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய தினங்களில் நடத்துகிறது.
இந்த கருத்தரங்குகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு உடையார்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலும், காலை 11 மணிக்கு ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், மதியம் 3 மணிக்கு தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியிலும், 18-ந்தேதி காலை 10 மணிக்கு செந்துறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும், 12.30 மணிக்கு நாகமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், மாலை 4 மணிக்கு அரியலூர் அரசினர் கலைக்கல்லூரியிலும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் எம்.பி., எம்.எல்.ஏக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.