தென்காசி
கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால்செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்-அதிகாரி, வியாபாரிகள் கருத்து
|கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குறித்து அதிகாரி, வியாபாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.
மருத்துவக்குணம்
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழச் சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள் தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில், லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
உணவு பாதுகாப்பு அதிகாரி
எப்படி ரசாயன கற்கள் பயன்படுத்தப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிப்பது என்பது குறித்து தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி (சென்னை) பி.சதீஷ்குமார் கூறியதாவது:-
கார்பைட் கற்கள் மற்றும் எத்திலீன் திரவ துளிகள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைப்பது பெருகி வருகிறது. இப்படி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடுவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம், மந்தம், நாவில் நீர்வறட்சி, நீர்ச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு நோய்கள் வருகின்றன.
தொடர்ந்து இப்படிப்பட்ட பழங்களை சாப்பிடுவதால் அல்சர் நோய்களை தாண்டி, புற்றுநோய்க்கும் ஆளாக வாய்ப்புள்ளது. எனவே மாம்பழங்களை வாங்கும்போது மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
புகை மூட்டும் பழக்கம்
மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்கும்போது, அடிப்பகுதியில் இருந்துதான் பழுக்கத் தொடங்கும். எனவே இயற்கையான முறையில் பழுத்த மாம்பழங்களின் காம்புப் பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. அனைத்து பகுதிகளும் ஒரு சேர மஞ்சள் நிறத்திலும் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் வேறுபடும். ஆனால் கல் வைத்து பழுக்கப்பட்ட மாம்பழங்கள் அனைத்து பகுதியும் பளீர் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இயற்கையாகப் பழுத்த ஒரு மாம்பழம் வீட்டில் இருந்தாலே அதன் மணம் காற்றில் கலந்து வீசும். ஆனால் செயற்கை முறையில் பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மணம் வீசாது.
மாம்பழத்தை நறுக்கும்போது பூ மாதிரி சதை கிழிந்தால் அது நல்ல பழம் ஆகும். நறநறவென்றோ, சதைப்பகுதியின் இறுதியில் வெள்ளை நிறத்திலோ இருந்தால் அது ரசாயனம் கொண்டு பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் ஆகும். நல்ல மாம்பழங்களை தண்ணீரில் போட்டால் மூழ்கி விடும். ஆனால் செயற்கையாக பழுக்க விடப்பட்ட மாம்பழங்கள் மிதக்கும். கிராமப்புறங்களை போல நகர் பகுதிகளில் மாம்பழங்கள் பழுக்கவிடப்படும் புகை மூட்டும் பழக்கம் இல்லை. எனவே மக்கள் மாம்பழங்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக பார்த்து வாங்க வேண்டும். தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை அரிசி டப்பாவில் போட்டுகூட பழுக்க விடலாம்.
2 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு
பொதுவாகவே மாம்பழங்கள் விளைச்சலின்போது ரசாயன மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மார்க்கெட்டுக்கு வரும்போது எத்திலீன் திரவங்களும் தெளிக்கப்படுகின்றன. எனவே தேர்வு செய்து வாங்கும் மாம்பழங்களை சுமார் 1 முதல் 2 மணி நேரம் தண்ணீரில் போடலாம். முடிந்தவரை தோல் நீக்கி சாப்பிடலாம்.
மாம்பழங்கள் போல சப்போட்டா, பப்பாளி, அவகடோ பழங்களும் இதுபோல ரசாயன கற்கள் கொண்டு பழுக்க வைக்கப்பட்டு வருகின்றன. இது தடை செய்யப்பட்ட நடவடிக்கை ஆகும். இதுபோன்ற செயலில் ஈடுபடும் கடைக்காரர்களின் கடை உரிமம் ரத்து, நேரடி வழக்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறோம். மாதிரிகளில் ரசாயனம் இருப்பது கண்டறிந்தால் கிரிமினல் வழக்காக அது மாற்றப்படும். 4 வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் கிடைக்கலாம். இதுபோன்ற ரசாயனம் கொண்டு பழுக்கவிடும் நடவடிக்கைகளை கண்டறிய உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, 2 நாட்களுக்கு ஒருமுறை நகரின் முக்கிய சந்தைகள், கடைவீதிகளில் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்கள் வலியுறுத்தல்
ரசாயன கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படும் செயல்களை தடை செய்யக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்.
நெல்லையை சேர்ந்த சமூக ஆர்வலர் காஜா முகைதீன்:-
பழங்கள் இயற்கையாக பழுத்தால், அதை சாப்பிடும்போது தித்திப்பாக இருக்கும். ஆனால் செயற்கையாக பழுக்க வைக்கும்போது அதன் ருசி போய் விடுகிறது. அந்த காலத்தில் புகை போட்டு பழுக்க வைப்பார்கள். ஆனால் தற்போது ரசாயன பொருட்களை பயன்படுத்தி மாம்பழங்களை ஒட்டுமொத்தமாக பழுக்க வைக்கிறார்கள். அதனை பொதுமக்களும் வாங்கி சாப்பிடுகிறார்கள். இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. எனவே மாம்பழம், வாழைத்தார் உள்ளிட்டவற்றை இயற்கையான முறையில் பழுக்க வைப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
கலப்படம் இல்லாத...
நெல்லையை சேர்ந்த ஹமீதா:-
செயற்கையாக மாம்பழம் உள்ளிட்டவை பழுக்க வைக்கப்படுகிறது. அதை சாப்பிடுபவர்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே பழங்களை வாங்கிய உடன் சாப்பிடக்கூடாது. மாம்பழத்தை 2 மணி நேரம் தண்ணீரில் போட்டு கழுவிய பிறகு சாப்பிடுவது நல்லது.
இதுதவிர சீசனுக்கு ஏற்ற, நம்மூரில் உற்பத்தி செய்யப்படும் பழங்களை சாப்பிட வேண்டும். மரபணு மாற்றப்பட்ட செடி, கொடி, மரங்களில் கிடைக்கும் பழங்களை சாப்பிடக்கூடாது. நுங்கு, இளநீர் போன்ற கலப்படம் செய்ய முடியாத பொருட்களை வாங்கி சாப்பிட வேண்டும்.
கவனித்து வாங்க வேண்டும்
தென்காசியை சேர்ந்த பழ வியாபாரி எஸ்.எம்.டி.சலீம்:-
நாங்கள் பரம்பரையாக 70 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கடை நடத்தி வருகிறோம். நாங்கள் மாம்பழங்களை இயற்கையாக பழுக்க வைத்து தான் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறோம். முந்தைய காலங்களில் கார்பைடு எனப்படும் ரசாயன கற்களை மாம்பழங்களுக்குள் வைத்து பழுக்க வைப்பார்கள். இவ்வாறு வைக்கப்படும் பழங்கள் மூன்று நாட்களுக்குள் மஞ்சள் கலர் வந்து பழுத்து விடும். ஆனால் தற்போது இந்த கற்களுக்கு பதிலாக பூச்சி மருந்து அடிப்பது போன்று ஸ்பிரே மூலம் காய்களின் மீது அடிக்கிறார்கள். கார்பைடு கற்கள் வைப்பது போன்று தற்போது இந்த முறை பின்பற்றப்படுகிறது.
இயற்கையாக பழுக்கும் பழங்களுக்கு தான் நல்ல வாசனையும், சுவையும் இருக்கும். இதனை சாப்பிடுவதால் எந்தவித கேடும் இருக்காது. ஆனால் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படும் பழங்களுக்கு மணம் இருக்காது. அதே நேரத்தில் இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உணவுப்பொருட்கள் பாதுகாப்பு அதிகாரிகள் இதனை கண்டுபிடித்து அழித்து வருகிறார்கள். இதுபோன்ற பழங்களை பார்த்தவுடன் நாம் கண்டுபிடிக்க முடியும். இயற்கையாக பழுக்க வைக்கும் பழங்களுக்கு அதிக நிறம் இருக்காது. மேலும் அதன் மேற்பகுதி சுருங்கி சுருங்கி சில மடிப்புகளாக இருக்கும். இதனை பொதுமக்கள் கவனித்து வாங்க வேண்டும்.
சீசன் தொடங்கியது
தூத்துக்குடியை சேர்ந்த பழக்கடை மேலாளர் சிவலிங்கம்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கி உள்ளது. இதனால் மல்கோவா, இமாம்பசந்த் போன்ற பல்வேறு பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பழங்கள் அனைத்தும் நாங்கள் பழைய முறையில் ஊத்தம் போட்டுதான் பழுக்க வைக்கிறோம். இதற்காக தனியாக அறையும் வைத்து உள்ளோம். எங்கள் கடையில் ரசாயனம் இன்றி பழுக்க வைக்கப்படுவதால், எங்கள் வாடிக்கையாளர்கள் எந்தவித தயக்கமும் இன்றி மாம்பழங்களை வாங்கி செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன்:-
தூத்துக்குடி மாவட்டத்தில் மாம்பழம் விற்பனை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. மாவட்டத்தில் கார்பைடு வைத்து பழங்களை பழுக்க வைக்கும் நடைமுறை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது. தற்போது அந்த நடைமுறை இல்லை. அதே நேரத்தில் அனுமதிக்கப்பட்ட எத்திலினை பழுக்க வைக்க பயன்படுத்தலாம். இதனை அறையில் வைத்து அது காற்றில் பரவுவதன் மூலமே பழுக்க வைக்க வேண்டும். ஆனால் அதனை மீறி அளவுக்கு அதிகமாக எத்திலினை பழங்கள் மீது தெளித்து விடுகின்றனர். இவ்வாறு பழங்கள் மீது எத்திலினை தெளிக்க கூடாது. அதிக அளவில் எத்திலின் உள்ள பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் எரிச்சல் ஏற்படும். மக்கள் மாம்பழம் வாங்கும்போது, நல்ல மணம் இருந்தால் அதனை தாராளமாக வாங்கலாம். அதே போன்று பழம் முழுமையாக மஞ்சளாக இல்லாமல் ஆங்காங்கே லேசாக பச்சை நிறத்திட்டுக்கள் இருப்பதை பார்த்து வாங்கலாம். அழுத்தி பார்க்கும்போது லேசாக கெட்டியாக இருந்தால் அந்த பழங்களை வாங்கலாம். நாங்கள் தொடர்ந்து மாம்பழங்களை பழுக்க வைக்க அனுமதிக்கப்பட்டதை தவிர வேறு ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று சோதனை நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.