கள்ளக்குறிச்சி
செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள்
|கார்பைட் கற்கள், எத்திலின் போன்ற ரசாயனங்களால் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்கள் குறித்து அதிகாரி, பொதுமக்கள் கருத்து தொிவித்துள்ளனா்.
முக்கனிகளில் முதன்மையானது மாங்கனி. அதன் இனிய சுவை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் வாயில் எச்சில் ஊறச் செய்துவிடும்.
மருத்துவக் குணம்
நமது உடலுக்கு முக்கியத் தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் மாம்பழத்தில் அதிகமாக கிடைக்கிறது. அதில் பொட்டாசியம் மற்றும் நார்சத்து மிகுந்திருப்பதால், உயர் ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கிறது.
இப்படிப்பட்ட சத்தும், சுவையும் மிகுந்த மாம்பழ சீசன் தொடங்கினால் போதும், ஒரு பிரச்சினையும் கூடவே சேர்ந்து வருகிறது. ரசாயனங்களால் பழுக்கப்பட்ட மாம்பழங்கள்தான் அந்த பிரச்சினைக்கு காரணம். குறுகிய காலத்தில் லாப நோக்கத்தில் ரசாயன கல் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள் விற்பனை அதிகரித்து வருவதால், மக்கள் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.
மக்களுக்கு விழிப்புணர்வு தேவை
ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிக்கவும், அதனை தடை செய்யவும் தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கண்டுபிடிக்கும் வழிமுறை
எப்படி ரசாயன கற்கள் பயன்படுத்தப்பட்ட மாம்பழங்களை கண்டுபிடிப்பது என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி டாக்டர் சுகந்தன் கூறியதாவது:-
ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் திட்டு திட்டாக பழுத்திருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழம் அதன் காம்பிலிருந்து மஞ்சள் நிறத்தில் பழுத்திருக்கும். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை வெட்டும்போது மாங்காயை வெட்டும் சத்தம் வரும். இயற்கையாக பழுத்த மாம்பழத்தை வெட்டும்போது பழத்தை வெட்டும் பதம் இருக்கும், சத்தம் வராது. செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் வாசனை வராது, இயற்கையாக பழுத்த மாம்பழத்தில் அதன் மாம்பழம் வாசனை நன்றாக வரும். செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தின் உள்பகுதி வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இயற்கையாக பழுத்த மாம்பழத்தின் உள்பகுதி மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை தண்ணீரில் போட்டால் மிதக்கும். ஆனால் இயற்கையாக பழுத்த மாம்பழம் தண்ணீரில் மிதக்காது. செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழத்தில் சுவை இருக்காது. ஆனால் இயற்கையாக பழுத்த மாம்பழம் சுவைமிக்கதாக இருக்கும்.
பொதுமக்களின் கவனத்திற்கு
மாம்பழங்களை சாப்பிடும் முன் நன்றாக ஊற வைத்து கழுவியப்பின் உண்ணவும், செயற்கையாக பழுக்க வைக்கும் மாம்பழங்களை உண்ணும்போது வயிறு உபாதைகள், அஜீரணக்கோளாறு போன்றவை உடனே ஏற்படும். தொடர்ந்து செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உண்ணுவதால் கேன்சர் போன்ற நோய்கள் உண்டாகலாம்.
விழுப்புரம் மாவட்டத்தில் ரசாயன கற்கள் மூலம் செயற்கை முறையில் பழுக்க வைக்கும் மாம்பழங்களை தேடி ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. தற்போது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு எச்சரிக்கை நோட்டீசு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கையாக ரசாயன கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை பறிமுதல் செய்தும் அழித்து வருகிறோம். செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைப்பவர்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, முதல் முறை கண்டறியப்பட்டால் எச்சரிக்கை நோட்டீசு கொடுத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படும். இரண்டாம் முறை தவறு செய்தால் சம்பந்தப்பட்ட வியாபாரி மீது வழக்குப்பதிவு செய்வதுடன் அபராதமும் விதிக்கப்படுகிறது. மீண்டும் தவறுகள் செய்தால் அவ்வியாபாரங்களை நிறுத்த உரிமத்தை தடை செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முற்றாக நீக்க நடவடிக்கை
ரசாயன கற்கள் கொண்டு மாம்பழங்கள் பழுக்க விடப்படும் செயல்களை தடை செய்யக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்களின் கருத்து வருமாறு:-
மேல்மலையனூர் அருகே வளத்தியை சேர்ந்த சத்யா:- இயற்கையைவிட செயற்கையின் மீது ஆசை அதிகமாகியதால்தான் இன்று பல நோய்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். பழங்களை கூட மரத்தில் இயற்கையாக பழுக்க விடுவதில்லை. வாழைப்பழத்தை காயாக அறுத்து அதை புகைப்போட்டு பழுக்கவைத்தும், மாங்காய்களை அறுத்து கார்பைட் கற்களை வைத்தும் பழுக்க வைக்கின்றனர். இதனால் வியாபாரிகளுக்கு வேண்டுமானால் லாபம் கிடைக்கும். ஆனால் அதை வாங்கி சாப்பிடும் மக்களுக்குத்தான் நோய்கள் ஏற்படுகிறது. கார்பைட் கற்கள் வைத்து பழுக்க வைக்கப்படும் மாம்பழங்களால் வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை ஆகியவை ஏற்பட்டு சில சமயங்களில் உயிரிழப்புகூட ஏற்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து பறிமுதல் செய்து வெளியில் கொட்டினாலும் அந்த தவறை ஒரு சில வியாபாரிகள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தம் வீட்டு மக்களை எப்படி பாதுகாக்கிறார்களோ அதேபோல் இதை வாங்கி சாப்பிடும் மக்களையும் தம் வீட்டு மக்களாக பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்த தவறு நடக்காமல் இருக்கும். எனவே வியாபாரிகள், கார்பைட் கற்கள் வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மக்கள் இப்போதுதான் இயற்கைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகின்றனர். அதேபோல் வியாபாரிகளும் இயற்கையாக பழுத்த பழங்களையே விற்பனை செய்ய வேண்டும்.
வாழைப்பழத்துக்கும் ரசாயன கலவை
திண்டிவனம் வக்கீல் சி.பி. சண்முகம்:-
காலங்காலமாக மாம்பழங்களை ரசாயனங்களால் பழுக்க வைப்பதை வியாபாரிகள் வழக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வாறு பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் அஜீரணம், வயிற்றுக் கோளாறுகள் போன்றவை ஏற்படுகிறது. இதை தடுத்து நடவக்கை எடுக்க வேண்டிய துறை அதிகாரிகள் என்ன காரணத்தினாலோ கண்டு கொள்வதே இல்லை. வருடத்தில் ஒரு முறை மாம்பழம் சீசனில் மட்டும் பெயரளவில் ஓரிரு இடங்களில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை பறிமுதல் செய்ததாக பத்திரிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பார்கள். இவர்கள் தொடர்ந்து பணி செய்கிறார்களா என்பதே சந்தேகமாக உள்ளது. ஏனெனில் மாம்பழ சீசனில் மட்டும் வேலை செய்வது போல் அதிகாரிகள் காட்டிக் கொள்ளுகிறார்கள். ஆனால் வியாபாரிகள் வருடம் முழுவதும் அனைத்து பழங்களுக்கும் குறிப்பாக வாழைப்பழத்துக்கும் ரசாயன கலவையை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் நிஜமாகும். இதன் மூலம் வியாபாரிகள் செய்யும் தவறுக்கு அதிகாரிகள் துணை நிற்கிறார்களா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.
கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கள்ளக்குறிச்சி பழனிவேல்:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடையில் மாம்பழம் வாங்கி சாப்பிட்டால் சுவையாக இக்கும். ஆனால் தற்போது ரசாயன கல் வைத்து செயற்கையாக பழுக்க வைக்கிறார்கள். இதன் சுவை வித்தியாசமாக இருக்கும். மணமாகவும் இருக்காது. உடலுக்கு உபாதையை ஏற்படுத்துகிறது. இதனை உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. பெயரளவிற்கு மட்டுமே சில கடைகளில் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் இத்தனை கிலோ பிடித்தார்கள், அத்தனை கிலோ பிடித்தார்கள் என்று செய்திதான் உலா வருகிறதே தவிர, செயற்கை கல் மூலம் பழங்கள் பழுக்க விடப்படும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடிவதில்லை. இதனால் சகஜமாக இந்த நடவடிக்கை தொடர்ந்து நடந்து தான் வருகிறது. வெயில் காலம் வந்தாலே கொப்புளங்கள், கட்டிகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. ஆனால் இந்த நோய் பிரச்சினைகளுக்கெல்லாம் ரசாயன கல் பழுக்கும் நடவடிக்கைகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். எனவே தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் நல்லது.
தொடர் ஆய்வுகள்
தியாகதுருகம் பாலமுரளிகிருஷ்ணன்:-
நல்ல முறையில் பழுக்க விடப்பட வேண்டிய மாம்பழங்களை, உடனடி லாபத்துக்காக ரசாயன கற்கள் மூலமாக வியாபாரிகள் பழுக்க விடுகிறார்கள். அதனை உடனடி வியாபாரத்துக்கு கொண்டு வந்து விற்பனையும் செய்துவிடுகிறார்கள். மக்களும் ஆபத்தை உணராமல் இந்த பழங்களை வாங்கி சாப்பிட்டு பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். எனவே உடனடி ஆய்வுகள், தொடர் ஆய்வுகள் மூலம் செயற்கை முறையில் பழங்களை பழுக்க விடும் சம்பவங்களை முழுவதுமாக அழிக்க வேண்டும். இதில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் நலன் காத்திடும் நடவடிக்கைகளை அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கையாள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வியாபார பிரமுகர் என்ன சொல்கிறார்?
கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் கூறியதாவது:-
மாம்பழ சீசன் வந்தாலே வியாபாரிகளை குற்றம் சொல்வது வாடிக்கையாகி விட்டது. செயற்கை முறையில் பழுக்க விடுகிறோம் என்றெல்லாம் விமர்சிக்கிறார்கள். தினந்தோறும் ஆயிரம் டன் அளவில் மாம்பழங்கள் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த அளவு மாம்பழங்களை கையாளவும், பழுக்கவிடவும் போதிய இட வசதி மார்க்கெட்டில் இல்லை. இயற்கை முறையில் பழுக்க விடவேண்டும் என்றால் அதற்கான காலம் அதிகம். அதுவரை வியாபாரிகள் என்ன செய்வார்கள்?
அதனால் பிற மாநிலங்களில் நடைமுறையில் உள்ள பழங்கள் பழுக்க விடும் நடவடிக்கைகளைதான், வியாபாரிகள் இங்கு கையாளுகிறார்கள். இந்த நடைமுறை தடை செய்யப்படும் அளவுக்கு மோசமானது கிடையாதே! பிற மாநிலங்களில் நடைமுறையில் இருப்பவைதான். எங்களுக்கும் பொதுமக்கள் நலன் மிகவும் முக்கியம்.
எனவே அரசே ஒரு தெளிவான வரைமுறைகளை வகுத்து தாருங்கள். அங்கீகரிக்கப்பட்ட, ஏற்றுக்கொள்ளப்பட்ட பழுக்க விடும் நடவடிக்கைகளை அறிமுகம் செய்து வழங்குங்கள். வெளிநாடுகளில் உள்ளது போல மார்க்கெட் வளாகத்தில் பழங்கள் பழுக்கவிடும் கூடங்களை (ரைபிங் சேம்பர்) உருவாக்கி தரவேண்டும். இதன்மூலம் மக்களும், வியாபாரிகளும் பாதுகாக்கப்படுவார்கள். இதை தமிழக அரசு செய்துதர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.