விழுப்புரம்
மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
|மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடைபெற்றன.
கலைத்திருவிழா போட்டிகள்
விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் வட்டார அளவில் கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை நடத்தப்பட்டது.
இப்போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று முதல் தொடங்கியது. இப்போட்டிகள் விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் நகராட்சி மேல்நிலைப்பள்ளி, மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி, விழுப்புரம் வி.மருதூர் ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 இடங்களில் நடந்தது.
3 பிரிவுகளாக...
இப்போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கும், 9, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும், 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இதில் கவின்கலை, நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, இசை சங்கமம், மொழித்திறன், நடனம், நாடகம் ஆகிய போட்டிகள் நடந்தன.
இப்போட்டிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 7 ஆயிரம் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை நிரூபித்தனர். இப்போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட கல்வி அலுவலர்கள் விழுப்புரம் மகாலட்சுமி, திண்டிவனம் சிவசுப்பிரமணியன், திண்டிவனம் தொடக்க கல்வி அலுவலர் செல்வக்குமார், விழுப்புரம் தொடக்க கல்வி அலுவலர் கவுசர், மாவட்ட கல்வி அலுவலர் (மெட்ரிக் பள்ளிகள்) ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் சசிகலா, செல்லையா, ஆனந்தசக்திவேல், சுசீலா, சேகர், பழனி, ஆனந்தவேல், ஜெகதீசன், உமாராணி, தேன்மொழி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகள் தொடர்ந்து இன்றும், நாளையும் (வெள்ளி, சனி) நடக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடத்தை பெறும் மாணவ-மாணவிகளுக்கு நாளை மாலை பரிசு வழங்கப்படுகிறது.