< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள்

தினத்தந்தி
|
27 Oct 2023 4:45 AM IST

திண்டுக்கல்லில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதனை கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.

கலை திருவிழா

அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான திண்டுக்கல் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. 2 நாட்கள் நடைபெறும் போட்டி தொடக்க விழாவுக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கினார். திண்டுக்கல் எம்.பி. வேலுச்சாமி, மாநகராட்சி மேயர் இளமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் கலை திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத்திருவிழா கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், 'கலையரசன், கலையரசி' என்ற பெயரில் விருதுகளும் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு, விருதுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மாநில அளவில் சிறப்பாக தங்களின் திறமையை வெளிப்படுத்திய 25 பேர் சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டனர். இதில் செங்கட்டாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி மாணவி சிவஹரிதாவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

5 ஆயிரத்து 571 பேர்

இந்த கலைத்திருவிழாவில் பள்ளி அளவில் கிராமிய நடனம், நவீன ஓவியம், காய்கறிகள், பழங்கள் மூலம் கலை பொருட்களை உருவாக்குதல், களிமண் மூலம் சிலைகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 61 ஆயிரத்து 557 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நடந்தது. அதில் 16 ஆயிரத்து 732 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து வட்டார அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவில் கவின்கலை, இசை, நடனம், நாடகம், மொழித்திறன் உள்ளிட்ட 188 வகையான போட்டிகளில் 5 ஆயிரத்து 571 பேர் பங்கேற்றனர்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் காந்திராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சுதாகர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்