< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள்

தினத்தந்தி
|
19 Oct 2023 3:30 AM IST

மாவட்டம் முழுவதும் 15 இடங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நேற்று தொடங்கியது.

கலை திருவிழா

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில், கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி அளவில் மொழித்திறன், இசை, நடனம், நாடகம், கவின்கலை உள்ளிட்ட தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு வட்டார அளவிலான போட்டிகள் நேற்று தொடங்கியது. திண்டுக்கல், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 15 இடங்களில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தன.

முதல் நாளான நேற்று மொழித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், கதை சொல்லுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் 1,500 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மாவட்ட அளவிலான போட்டி

திண்டுக்கல் வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டி திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் நகரில் உள்ள 5 அரசு பள்ளிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) நடனம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. வட்டார அளவில் வெற்றிபெறும் மாணவ-மாணவிகளுக்கு அடுத்த வாரம் மாவட்ட அளவிலான போட்டி நடைபெற இருக்கிறது.

மேலும் செய்திகள்