< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி தொடக்கம்  கலெக்டர் தகவல்
கடலூர்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி தொடக்கம் கலெக்டர் தகவல்

தினத்தந்தி
|
26 Nov 2022 7:30 PM GMT

கடலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைத் திருவிழா போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை வடிவங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாகவும், பள்ளிக் கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாகவும் கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கலை சார்ந்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் 6 முதல் 12-ம் வகுப்புகளில் பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

கடலூர் மாவட்டத்தில் கலைத் திருவிழா போட்டிகள் 6 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 மற்றும் 10-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12-ம் வகுப்பு ஒரு பிரிவாகவும் என மொத்தம் 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட உள்ளது. போட்டியில் தனி நபராகவோ அல்லது குழுக்களாகவோ கலந்து கொள்ளலாம்.

தனிப்போட்டி

மேலும் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கவின்கலை நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் எனும் 6 தலைப்பின் கீழ் நடைபெற உள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை-நுண்கலை, இசை (வாய்ப்பாட்டு), கருவி இசை தோல்கருவி, கருவி இசை காற்றுக்கருவிகள், கருவி இசை தந்தி கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் தலைப்பிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கவின்கலை - நுண்கலை, இசை வாய்ப்பாட்டு, கருவிஇசை - தோல் கருவி, கருவி இசை காற்றுக் கருவி, கருவி இசை- தந்திக் கருவிகள், இசை சங்கமம், நடனம், நாடகம், மொழித்திறன் எனும் தலைப்பிலும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

ஒருவர் ஏதேனும் மூன்று தனிப்போட்டி மற்றும் இரண்டு குழுப்போட்டியில் மட்டுமே அதிகபட்சமாக பங்கு பெற முடியும். பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் முதலிடம் பெறும் ஒரு மாணவர் மட்டும் வட்டார அளவிலும், வட்டார அளவில் முதல் இரண்டு இடத்தை பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலும கலந்து கொள்ளலாம்.

கல்வி சுற்றுலா

மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் போட்டிகளிலும் அனுமதிக்கப்படுவர். மாநில அளவிலான கலைத் திருவிழா இறுதி போட்டிகள் ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும், கலையரசன், கலையரசி என்ற விருதுகளும், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும்.

மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களின் தரவரிசையில் முதன்மைபெறும் 20 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். கடலூர் மாவட்டத்தில் பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டி கடந்த 23-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 28-ந் தேதி வரையும், வட்டார அளவில் வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி வரையும், மாவட்ட அளவில் 6 முதல் 10-ந் தேதி வரை, மாநில அளவில் ஜனவரி மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும் கலைத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளது.

எனவே அனைத்து வகை அரசுப்பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இக்கலை திருவிழா போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்