திருவாரூர்
கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும்- கலெக்டர் சாருஸ்ரீ
|கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
கலை போட்டிகளால் மாணவர்களின் தனித்திறன் மேம்படும் என கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.
கலை போட்டிகள்
திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடந்தன. இதை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். அப்போது பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.
அப்போது கலெக்டர் கூறியதாவது:-
கல்வித்துறை என்பது மாணவ-மாணவிகளை கல்வி கற்க வைப்பது, தேர்வில் வெற்றி பெற செய்து உயர்நிலைகளுக்கு அவர்களை அழைத்து செல்வது என நின்று விடாமல், பலவித புது முயற்சிகளால் மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலை திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்களிடையே பல்வேறு தனித்திறன்கள் உள்ளன.
வருத்தப்படக்கூடாது
அந்த தனித்திறன்களை மேம்படுத்தும் கலை போட்டிகளை சரியான முறையில் பயன்படுத்திக்ெகாள்ள வேண்டும். இதுபோன்ற போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் வருத்தப்படக்கூடாது. அடுத்தடுத்த போட்டிகளில் தவறினை திருத்திக்கொண்டு வெற்றி பெற உழைக்க வேண்டும்.
மாநில அளவிலான கலை போட்டிகளில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
விழாவில் நகரசபை தலைவர் புவனப்பிரியா செந்தில், துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, நகர நியமனக்குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) மாதவன், மாவட்ட கல்விஅலுவலர் (தொடக்கக்கல்வி) சவுந்தர்ராஜன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) மாயகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.