< Back
மாநில செய்திகள்
கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் - செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்

தினத்தந்தி
|
29 Nov 2022 4:10 PM IST

கலை பண்பாட்டுத்துறை சார்பில் மாணவ-மாணவிகளுக்கு கலைப்போட்டிகள் நடத்தப்படும் என்று கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.

கலைப்போட்டிகள்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு அரசு சவகர் சிறுவர் மன்றம் சார்பில் 2022-2023-ம் நிதியாண்டில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற மாணவ- மாணவி்களை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்திட 5-8, 9-12, 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 4 கலைப் பிரிவுகளில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகள் நடத்தி, 9-12, 13-16 ஆகிய வயது பிரிவில் மாவட்ட அளவில் கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகி்ற மாணவ- மாணவி்களுக்கு அரசின் சார்பில் பாராட்டு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கிட நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த போட்டிகள் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்-சேலையூர் சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 3.12.2022 (சனிக்கிழமை) அன்று மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை போட்டிகள் நடைபெறும். இதில் குரலிசைப் போட்டியில் முறையாக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரத நாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடன போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.

விவரம் வேண்டுவோர்

இந்த போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனத்துக்கு அனுமதி இல்லை. நாட்டுப்புற நடனப்போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், போன்ற நடனங்கள் மட்டும் ஆடப்பெற வேண்டும். ஓவியப்போட்டிக்கு ஓவியத்தால், வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். ஓவிய தலைப்புகள் போட்டி தொடங்கும் முன்னர் அறிவிக்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சீபுரம் என்ற முகவரியை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண். 044 -27269148 அல்லது 9952004323 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பினை கலைத்திறன் மிக்க செங்கல்பட்டு மாவட்ட மாணவ-, மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்