அரியலூர்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள்
|பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகள் நடந்தன.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் இயங்கி வரும் திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் அரியலூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கலை போட்டிகளை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தியது. இதில் 5 முதல் 8 வயது வரையும், 9 முதல் 12 வயது வரையும், 13 முதல் 16 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் போட்டிகள் தனித்தனியாக நடந்தது. போட்டிகளில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து மொத்தம் 122 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையத்தின் உதவி இயக்குனர் நீலமேகம் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் திட்ட அலுவலர் நடராஜன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதற்கிடையே பரதநாட்டியம், நாட்டுப்புற நாட்டியம் ஆகிய போட்டிகளில் பங்கேற்ற சில மாணவிகள் போதிய இடவசதியின்றி மிகுந்த சிரமத்துடன் நடனமாடியதாக தெரிவித்தனர்.