< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் தொடக்கம்
நாமக்கல்
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
25 Nov 2022 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலைப்போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொண்டு வரும் வகையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கலை போட்டிகளை தாலுகா, மாவட்டம், மாநிலம் வாரியாக நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் கலைத்திருவிழா போட்டிகள் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை, 9 மற்றும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 என 3 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கவின் கலைநுண்கலை, இசை (வாய்ப்பாடு), கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் என 6 தலைப்புகளின் கீழ் போட்டி நடக்கிறது. 9 மற்றும் 10-ம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு, கவின் கலைநுண்கலை, இசை (வாய்ப்பாடு), கருவி இசை, இசை சங்கமம், நடனம், நாடகம் மற்றும் மொழித்திறன் என்ற தலைப்புகளில் நடத்தப்படுகிறது.

கலைப்போட்டிகள்

நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி அளவிலான கலைத்திறன் போட்டிகள் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கியது. இந்த போட்டிகள் வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. நாமக்கல் ஒன்றியம், காவேட்டிப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த கலைத்திறன் போட்டிக்கு பள்ளி தலைமையாசிரியர் கயல்விழி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அனிதா தொடங்கி வைத்தார். வார்டு உறுப்பினர் தேன்மொழி, வட்டார கல்வி அலுவலர் மாதவன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர்களுக்கு ஓவியம், அழகு கையெழுத்து தமிழ், ஆங்கிலம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. தாலுகா அளவிலான போட்டிகள் வருகிற 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 5-ந் தேதி வரையும், மாவட்ட அளவிலான போட்டிகள், டிசம்பர் 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரையும் நடக்கிறது.

மேலும் செய்திகள்