< Back
மாநில செய்திகள்
சேலம் மாவட்டத்தில் 21 பள்ளிகளில் கலை போட்டி
சேலம்
மாநில செய்திகள்

சேலம் மாவட்டத்தில் 21 பள்ளிகளில் கலை போட்டி

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளில் வட்டார அளவிலான கலை போட்டியில் 39 ஆயிரத்து 920 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கலை போட்டி

அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் பள்ளி, வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் கவின்கலை, இசை, நடனம், நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்தாண்டு பள்ளி அளவிலான கலை போட்டி கடந்த 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற்றது.

மாவட்டத்தில் 662 பள்ளிகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முதல் 3 இடம் பிடித்த மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். வட்டார அளவிலான கலை போட்டி மாவட்டத்தில் உள்ள 21 பள்ளிகளில் தொடங்கியது.

39,920 மாணவர்கள் பங்கேற்பு

இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை 21 ஆயிரத்து 482 பேர், 9 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரை 11 ஆயிரத்து 546 பேர், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வரை 6 ஆயிரத்து 892 பேர் என மொத்தம் 39 ஆயிரத்து 920 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்கள் கலை போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இந்த போட்டியை மாவட்ட கல்வி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். இந்த கலை போட்டிகள் வருகிற 28-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடைபெறும் மாவட்ட அளவிலான கலை போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்