மயிலாடுதுறை
கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது
|கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொண்டு வர உதவுகிறது என செம்பனார்கோவிலில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கலைத் திருவிழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
திருக்கடையூர்:
கலை திருவிழா
செம்பனார் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டி நடந்தது. இதற்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். எம்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. கலைச்செயல்பாடுகள் குழந்தைகளின் உள்ளார்ந்த திறமைகளை வெளிக்கொணரக்கூடிய சூழலை உருவாக்குகிறது. இந்த நிலையில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலைத்திருவிழா போட்டிகளில் மாவட்ட அளவில் கடந்த 10-ந் தேதி முதல் 14-ந் தேதி நடத்தப்பட்டன. இதில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு கடந்த 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை வட்டார அளவிலான போட்டிகள் அந்தந்த ஒன்றியங்களில் நடத்தப்பட்டன.
முதல்-அமைச்சர் பரிசு வழங்குகிறார்
இதில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் தொடங்கவுள்ளன. மாவட்ட அளவில் முதலிடம் பெறும் மாணவர்கள் அடுத்த மாதம் (நவம்பர்) 21-ந் தேதி சென்னையில் தொடங்கவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்-அமைச்சர் பரிசுகள் வழங்க உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழா போட்டியில் தனிநபர் மற்றும் குழு பிரிவு என மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 17 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று பெருமை சேர்த்துள்ளனர்.தமிழக அரசு, அரசு பள்ளி மாணவர்களுக்கென கொண்டு வரும் இத்தகைய திட்டங்களை பயன்படுத்தி வாழ்க்கையில் உயர்ந்திட வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல், தனியார் கல்லூரி கல்வி குழும நிர்வாக இயக்குனர் குடியரசு, மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கநிலை) பார்த்தசாரதி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஞானசங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.