< Back
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம், சமயபுரம், திருப்பைஞ்சீலி கோவில்களில் அம்பு போடும் நிகழ்ச்சி
திருச்சி
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம், சமயபுரம், திருப்பைஞ்சீலி கோவில்களில் அம்பு போடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
25 Oct 2023 1:24 AM IST

ஸ்ரீரங்கம், சமயபுரம், திருப்பைஞ்சீலி கோவில்களில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

ஸ்ரீரங்கம், சமயபுரம், திருப்பைஞ்சீலி கோவில்களில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது.

நவராத்திரி விழா

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த 21-ந்தேதி ரெங்கநாச்சியார் திருவடிசேவை நடைபெற்றது. விஜயதசமியையொட்டி நேற்று காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காட்டழகிய சிங்கர் கோவில் ஆஸ்தான மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். பின்னர் மாலை 6.30 மணியளவில் அங்கிருந்து தங்ககுதிரை வாகனத்தில் புறப்பட்டு கோவிலில் உள்ள வன்னிமரத்தில் அம்பு போட்டார். இந்நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கிருந்து புறப்பட்டு சாத்தாரவீதி வழியாக வலம் வந்து இரவு 8.30 மணியளவில் சந்தனுமண்டபம் சேர்ந்தார். பின்னர் இரவு 9.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அமுதுபாறையில் திருமஞ்சனம் கண்டருளினார். இதில் ஏராளமானோர் பங்கேற்று வழிபட்டனர்.

சமயபுரம்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் விஜயதசமி விழா நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி, இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளினார்.தொடர்ந்து கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க வன்னி மரம் சென்றடைந்தார்.

அதைத்தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.

திருப்பைஞ்சீலி நீலிவனநாதர்

இதேபோல் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவிலில் அம்பு போடும் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நீலிவனநாதருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளி கடைவீதி வழியாக கீழாடிமண்டபம் சென்றடைந்தார். அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர்.

திருப்பட்டூர்

இதேபோல் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை படைத்த திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலும் அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்