< Back
மாநில செய்திகள்
3 மணி நேரத்தில் இலக்கை நோக்கி   2022 அம்புகளை எய்த மாணவர்கள்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

3 மணி நேரத்தில் இலக்கை நோக்கி 2022 அம்புகளை எய்த மாணவர்கள்

தினத்தந்தி
|
4 Sept 2022 10:41 PM IST

3 மணி நேரத்தில் இலக்கை நோக்கி 2022 அம்புகளை எய்து மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் சேதுபதி மன்னர் அறக்கட்டளை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட ஆர்செரி அசோசியேசன் சார்பில் உலக சாதனைக்காக அம்பு எய்தும் நிகழ்ச்சி ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

உலக சாதனைக்காக நடைபெற்ற இந்த அம்பு எய்தல் போட்டியை தேசிய பால் பேட்மிண்டன் விளையாட்டு வீரர் விஜய் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சேதுபதி மன்னர் நினைவு அறக்கட்டளை சார்பில் ராஜா நாகேந்திர சேதுபதி, ராமநாதபுரம் மாவட்ட ஆர்செரி அசோசியேசன் தலைவர் ராஜு, ராமநாதபுரம் மாவட்ட ஸ்கேட்டிங் ரோல் சங்க தலைவர் ரமேஷ் பாபு, மாஸ்டர் செந்தில்குமார், தாசில்தார் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த நோபல் உலக சாதனை அம்பு எய்தல் போட்டியில் ராமநாதபுரத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த தியானாசாபிதா, முபிதா, லோக பிரியா, மல்லிஷ்கா ஆகிய 4 மாணவிகளும் மற்றும் சிவனேசுவர், ஸ்ரீனிவாஸ், ராஷி அப்துல்லா ஆகிய 3 மாணவர்களும் கலந்து கொண்டு இலக்கை நோக்கி அம்பு எய்தனர். 5 மணி நேரத்திற்குள் அம்பு எய்த நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்த நிலையில் 7 மாணவர்களும் 3 மணி நேரம் 31 வினாடிகளுக்குள் 2022 அம்புகளை குறிப்பிட்ட தூர இலக்கை எய்து சாதனை படைத்தனர். 3 மணி நேரத்திற்குள் 2022 அம்பு எய்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு நோபல் உலக சாதனை தரச் சான்றிதழ் மற்றும் சாதனை பட்டயத்தை ராணி லட்சுமிகுமரன் சேதுபதி மற்றும் அறக்கட்டளை தலைவர் ஷேக் சலீம் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுகளை பயிற்சியாளர் மதுப்ரீத்தா, ஆர்செரி அசோசியேசன் அமைப்பினர் செய்திருந்தனர். தமிழ்நாட்டில் இதுவரை தொடர்ந்து 1,500 அம்புகள் மட்டுமே எய்து சாதனை நடைபெற்றுள்ள நிலையில் முதல்முறையாக ராமநாதபுரத்தில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 7 மாணவர்கள் 3 மணி நேரத்திற்குள் 2022 அம்பு எய்து சாதனை படைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்