< Back
மாநில செய்திகள்
தனியார் கூரியர் நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்
மாநில செய்திகள்

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் வருகை; மின்னணு பரிமாற்றம் அதிகரிப்பு தள்ளாடுகிறதா தபால்துறை? மனம் திறக்கிறார்கள் மக்கள்

தினத்தந்தி
|
8 Nov 2022 12:15 PM IST

உடல் எங்கும் ஓடுகின்ற ரத்த நாளங்கள் போல், உலகு எங்கும் ஓடிக்கொண்டு இருப்பது, தபால்துறை. அதன் கையில் ஒரு கடிதத்தை ஒப்படைத்துவிட்டால் குறைந்தது 4 நாட்களில் உலகின் எந்த திசையாக இருந்தாலும் ஓடோடிப்போய்ச் சேர்த்துவிடும். அத்தகைய நம்பகத்தன்மை கொண்டது.

தபால்காரர் ஒரு பழைய சைக்கிளை உருட்டிக்கொண்டு கிராமத்து தெருக்களில் வருவார். சில காகிதங்களை கையிலும் பையிலும் வைத்திருப்பார். அவருக்குத்தான் எத்தனை மரியாதை?

கடுதாசிகள்

அன்புள்ள அம்மா, அப்பா நலம் நலமறிய அவா... என்று பிழைப்பு தேடி நகரங்களுக்கு சென்ற பெற்ற பிள்ளைகள் எழுதிய கடுதாசிகள். அதற்காக நாளும் காத்துக்கிடந்த பெற்றோர்கள்.

அன்பு மனைவிக்கு ஆசையுடன் அத்தான் எழுதிக்கொள்வது என்னவென்றால்... என்று எல்லையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள், ஏக்கங்கொண்ட மனைவியர்களுக்கு எழுதிய மடல்கள்.

அன்புள்ள மான்விழியே... என்று காதலர்கள் வரையும் காதல் கடிதங்களுக்காக காத்திருந்த காதலிகள். அவர்களின் பதில்களை எதிர்நோக்கி பார்த்திருந்த காதலர்கள்.

இப்படி காத்து இருப்பவர்கள் எல்லாம் அந்த பழைய சைக்கிள்காரரைத்தான் தேடி எதிர்பார்த்து இருப்பார்கள்.

அவர் கொண்டுவருவது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம், சிலநேரங்களில் அதிர்ச்சியான (டெலகிராம்) தகவலாகவும் இருக்கலாம்.

தலைகீழ் மாற்றம்

இப்போது நிலை தலைகீழாகிவிட்டது. வாட்ஸ்-அப், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என்று சமூக வலைத்தளங்கள் சைக்கிள் இல்லாத தபால்காரர்களாக செயல்பட்டு வருகின்றன.

முன்பு எல்லாம் விழாக்காலங்களில் தபால் பெட்டிகள் வயிறு நிரம்பி, வாய்வழியே வாழ்த்து கடிதங்கள் எட்டிப்பார்க்கும். இப்போது திறந்துபார்த்தால் வறியவர் வயிறு போல் வற்றிப்போய் ஒன்று இரண்டு கடிதங்களே உள்ளே கிடக்கின்றன.

தனியார் 'கூரியர்' நிறுவனங்கள் தபால்துறைக்கு சவாலாக வளர்ந்துவிட்டன.

இந்த போட்டிகளில் இருந்து தம்மை மீட்டுக்கொள்ள, தபால் துறையும் தன்னை உருமாற்றிக்கொண்டு வருகிறது. அது எப்படி? என்பதை பார்ப்போம்.

தரமான சேவை



இதுபற்றி தமிழ்நாடு வட்ட தபால் துறை தலைவர் செல்வகுமார் கூறும்போது, ''தபால் துறைக்கு தனிநபர் கடிதங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வரும் வாழ்த்து அட்டைகள் குறைந்தாலும் அதற்கு ஈடாக பாஸ்போர்ட்டு, வங்கிச்சேவை, ஆதார் அட்டைக்கான பணிகளை சிறப்பாக அளிக்க தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி வருகிறோம்'' என்றார்.

''பதிவு தபால் சேவை 5 சதவீதமும், விரைவு தபால் சேவை 15 சதவீதமும் அத்துடன் வணிக நிறுவனத் தபால்களும் அதிகரித்துள்ளன. மாநிலம் முழுவதும் 1,459 தபால் துறை மையங்கள் மூலம் கடந்த ஆண்டு 18 லட்சம் ஆதார் அட்டைக்கான பயன்பாட்டு பணிகள் நடந்துள்ளன. அதேபோல் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து நடப்பு ஆண்டு வரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 564 பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் கையாளப்பட்டன. பொதுமக்களின் மாறாத நம்பிக்கையுடன் அவர்களுக்கு தரமான சேவையை தபால்துறை தொடர்ந்து செய்து வருகிறது'' என்றும் அவர் சொன்னார்.

ஆங்கிலேயர் நடைமுறை

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் ஏ.இஸ்மாயில் கூறியதாவது:-

தபால்துறை பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட, இந்திய தபால் பேமென்ட் வங்கி மூலம் டிஜிட்டல் சேவையை பொதுமக்கள் பெற்று வருகிறார்கள்.

ஆதார் அட்டை, ஆயுள் சான்றிதழ் வழங்குவது, வங்கி, மின்வாரியம், தொலைத் தொடர்புத்துறை தொடர்பான பணிகளையும் தபால் நிலையங்கள் செய்து வருகின்றன.

1854-ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் நமது நாட்டில் தபால் நிலையங்களை திறக்கும் போது, கிராமிய தபால் நிலையங்களை புறநிலை தபால் நிலையங்களாக நிர்வகித்தனர். அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் கிளை தபால் நிலையங்களில், 1.26 லட்சம் தபால் அலுவலகங்கள் கிராமங்களில் இருக்கின்றன. சுமார் 2.60 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகிறார்கள். துறைக்கான மொத்த வருவாயில் 75 சதவீதத்தை அவர்கள் தேடித்தருகிறார்கள். ஆனால் அவர்கள் ஓய்வுபெறும் போது வெறும் ரூ.1.50 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது. அவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களும், மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தித் தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இணையதள சேவையால்...

சென்னையில் உள்ள தபால் அலுவலகங்களுக்கு வந்த சிலர் தங்கள் கருத்துகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டனர்.



தாம்பரத்தைச் சேர்ந்த மதன் கூறும்போது, 'பொதுமக்களின் கடிதங்களையும், வாழ்த்து அட்டைகளையும் கையாண்டுவந்த தபால் துறை, தற்போது வங்கி உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இணையதள சேவை அதிகரிப்பால் தபால்துறை தடம் மாறி தன்னுடைய பிரதான சேவைகளை பெருமளவு இழந்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று, 'டெலகிராம்'. இந்த சேவை தற்போது முற்றிலும் இல்லை. ஆனால் மணியார்டர் சேவை இப்போதும் இருக்கிறது. இதை பொதுமக்கள் பலரும் பயன்படுத்திவருகின்றனர்' என்றார்.




ஆவடியைச் சேர்ந்த பாலகுமார் கூறும்போது, 'திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்ணுகுளம் என்ற கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து வங்கி ஒன்றில் டிரைவராக பணியாற்றுகிறேன். ஊரில் உள்ள என்னுடைய வயதான தாய்க்கு செல்போனில் பேசினாலும், இப்போதும் 2 மாதத்துக்கு ஒருமுறை கடிதம் எழுதி வருகிறேன். அதுதான் அனைத்து தகவல்களையும் சிந்தாமல் சிதறாமல் என்னுடைய தாயிடம் கொண்டு சேர்க்கிறது. ஆனால் பலர் மழைக்குக்கூட தபால் அலுவலகங்களில் ஒதுங்குவதில்லை. இந்த நிலையை மாற்றி, இளைய தலைமுறையினர் தபால் அலுவலகங்களை நாடிவரும் வகையில் ஏதாவது ஒரு புதுமை புரட்சியை தபால்துறை செய்ய வேண்டும்' என்றார்.

கடிதம் எழுத ஊக்குவிக்க வேண்டும்



காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பாலாஜி கூறும்போது, 'பண்டிகை காலங்களில் தபால்துறையால் கொண்டுவரப்படும் வாழ்த்து அட்டைகளுக்கு இருந்த மவுசை என்னுடைய பெற்றோர் மூலம் அறிந்துள்ளேன். அதனால் தபால்துறை மீண்டும் பழைய பொலிவுடன் செயல்படுவதை பார்க்க விரும்புகிறேன். தபால்தலை சேகரிப்பதை ஊக்குவிப்பது போன்று இளைஞர்கள் கடிதம் எழுதுவதையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் தபால்துறை ஊக்குவிக்க வேண்டும். வங்கிச் சேவையில் ஈடுபட்டுள்ள தபால்துறை, சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச தொகை வைத்திருக்க தேவையில்லை என்று அறிவித்தால் என்னைப் போன்ற மாணவர்கள் பலர் பயனடைவார்கள். வங்கிச் சேவையும் விரிவடையும்' என்றார்.



எழும்பூரைச் சேர்ந்த எஸ்.கந்தலெட்சுமி கூறும்போது, 'வங்கிச் சேவைக்காகத்தான் தபால் அலுவலகங்களுக்கு வருகிறோம். முன்புபோல் கடிதம் எழுதும் பழக்கம் இல்லாததால் இன்லாண்டு லெட்டர், தபால் அட்டை, தபால்தலைகள் வாங்கும் பழக்கம் அரிதாகிவிட்டது. வங்கிச் சேவையை மேலும் சிறப்பாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

தபால்துறையின் அடையாளம்


சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த ஜெ.சசிகலா, 'தபால் அலுவலகத்தில் செய்துள்ள முதலீட்டுக்கான வட்டியை பெற வந்தேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு நான் முதலீடு செய்யும்போது 12 சதவீதம் வட்டி, 10 சதவீதம் போனஸ், 2 சதவீதம் ஊக்கத்தொகை மற்றும் முகவர்கள் 1 சதவீதம் ஊக்கத்தொகை அளித்தார்கள். ஆனால் தற்போது தபால்துறை வெறும் 6.7 சதவீதம் மட்டுமே வட்டி வழங்குகிறது. தபால்துறை தபால் கையாளுவதை மறந்து வங்கிச் சேவையில் ஈடுபட்டு இருந்தாலும், கூடுதலான வட்டியை அளித்து வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.




தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் என்ஜினீயர் பவித்ரா, 'அனைத்து துறைகளும் தொழில்நுட்ப வளர்ச்சியால் அடுத்தகட்டத்துக்கு நகர்வது தவிர்க்க முடியாத ஒன்று. அந்தவகையில்தான் தபால்துறையும் உள்ளது. கடிதங்கள், தபால்தலைகள் வாங்க தபால் அலுவலகத்துக்கு வந்த நிலை மாறி, வங்கிச் சேவைக்காக வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தபால்துறை தன்னுடைய அடையாளத்தை இழக்காமல் இருக்க வேண்டுமானால், மீண்டும் கடிதங்களை அதிகம் கையாளும் நிலை ஏற்பட வேண்டும். அதற்கு உதவும்விதமாக இளைஞர்களும் கடிதம் எழுதும் பழக்கத்துக்கு வர வேண்டும்' என்றார்.

செல்வமகளுக்கு மாறிய தபால்துறை


சென்னையைச் சேர்ந்த டெக்னீசியன் கார்த்திக் கூறும்போது, 'தற்போது தபால் அலுவலகங்களில் நீண்டவரிசை என்பதையே காண முடியவில்லை. நான் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் பணம் செலுத்துவதற்காக வந்துள்ளேன். தபால்துறையும் செல்வமகளுக்கு மாறியதுடன், நல்ல திட்டங்களை செயல்படுத்துகிறது. இதை மேலும் சிறப்பாக்குவதற்கு கணினியில் அடிக்கடி ஏற்படும் சர்வர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும்' என்றார்.




எழும்பூரைச் சேர்ந்த கணக்காளர் அருண், 'தபால் அட்டை, தபால்தலைகள் வாங்குவதற்காக எவரும் பெரிதாக தபால் அலுவலகத்துக்கு வருவதாக தெரியவில்லை. பார்சல் அனுப்புவதற்கும், விரைவு தபால் அனுப்புவதற்காகவும்தான் வருகின்றனர். தனியாரைவிட கட்டணம் குறைவு, பொருட்கள் பாதுகாப்பாக சென்று சேரும் என்ற நம்பிக்கையில்தான் தபால் அலுவலகம் வருகிறோம். ஆனால் பொருட்கள் சென்று சேருவதில் சிலநேரங்களில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்' என்றார்.



வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜமுனா, 'தற்போது பொதுவாக தபால் பட்டுவாடா குறைந்து காணப்படுகிறது. அதேபோல், தெருக்களிலும் தபால் பெட்டிகளை காண்பது அரிதாகிவிட்டது. கிளை தபால் நிலையங்களில் பொதுமக்களை அதிக நேரம் காத்திருக்கவைக்காமல் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டும். முறையான இருக்கை வசதிகள் செய்துதர வேண்டும். செல்வமகள் மற்றும் செல்வமகன் சேமிப்பு திட்டம் வரவேற்க தகுந்தவை. இவற்றுக்கான தொகையை ஆன்லைனில் கட்டும் முறையை அமல்படுத்த வேண்டும். அதேபோல், சிறுசேமிப்பை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக, பள்ளிகளுடன் இணைந்து மாணவர்களுக்கான சிறுசேமிப்பு கணக்குகளை தபால்துறை தொடங்க வேண்டும்' என்றார்.

தபால் பெட்டி கதை


•1,653-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில்தான் முதல் முறையாக தெரு ஓரங்களில் தபால் பெட்டிகள் நிறுவப்பட்டன.

•1,800-ம் ஆண்டு தபால் பெட்டிகள் பச்சை நிறத்தில் இருந்தன. பின்னர் பளிச்சென்று தெரிவதற்காக சிவப்பு நிறத்தில் மாற்றப்பட்டன.

•1856-ல் விக்டோரியா மகாராணியின் கிரீடம் போன்ற தோற்றத்தில் தபால் பெட்டி வடிவமைக்கப்பட்டு இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டது.

•1857-ல் சுவரில் பதிக்கப்படும் வகையில் தபால் பெட்டி அறிமுகம் ஆனது.

•1879-ல் உருளை வடிவத்தில் தபால் பெட்டிகள் வந்தன.

•டி.வி. வடிவிலான தபால் பெட்டிகளும், உருளை வடிவிலான தபால் பெட்டிகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன.

•தமிழ்நாட்டில் மொத்தம் 7 ஆயிரத்து 385 தபால் பெட்டிகள் இருக்கின்றன. கடந்த ஆண்டு 700 தபால் பெட்டிகள் தற்காலிகமாக அகற்றப்பட்டன.

•தமிழக தபால் துறையில் 44 ஆயிரத்து 123 பேர் பணி செய்கிறார்கள். அவர்களில் 7,970 பேர் பெண்கள்.

•தமிழகத்தில் உள்ள தபால் நிலையங்கள்:

94 தலைமை தபால் நிலையங்கள்.

2,052 துணை தபால் நிலையங்கள்.

2,096 துறை ரீதியான தபால் நிலையங்கள்.

9,266 கிளை தபால் நிலையங்களும்

அவற்றில் அடங்கும்.

மேலும் செய்திகள்