< Back
மாநில செய்திகள்
குடும்பத்தை பிரித்ததால் அண்ணியை கொன்றேன்  கைதான கொழுந்தன் பரபரப்பு வாக்குமூலம்
கடலூர்
மாநில செய்திகள்

'குடும்பத்தை பிரித்ததால் அண்ணியை கொன்றேன்' கைதான கொழுந்தன் பரபரப்பு வாக்குமூலம்

தினத்தந்தி
|
27 Aug 2022 12:49 AM IST

திட்டக்குடி அருகே பெண் கொலை வழக்கில் குடும்பத்தை பிரித்ததால் அண்ணியை கொன்றேன் என்று கைதான கொழுந்தன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராமநத்தம்,

குத்திக்கொலை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவருக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன், காசிநாதன் ஆகிய 4 மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.

இதில் வெங்கடேசனும்(வயது 38), செஞ்சியை சேர்ந்த பிரேமலதாவும்(25) கடந்த 2 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

வெங்கடேசன் சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்றுவிட்டார். இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் வெங்கடேசன் தம்பியான காசிநாதன் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்து திடீரென கத்தியால் பிரேமலதாவை சரமாரியாக குத்திக்கொலை செய்தார். பின்னர் அவர் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

வாக்குமூலம்

இதையடுத்து காசிநாதனை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தின் விவரம் வருமாறு:-

எனது 2-வது அண்ணன் ரவியின் மனைவி ராதிகா அடிக்கடி என்னிடம் நம் குடும்பத்தை பிரிந்து வெவ்வேறு ஊரில் வசித்து வருவதற்கு காரணம் பிரேமலதா தான் என கூறினார். இதனால் பிரேமலதா மீது எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது.

இதையடுத்து குடும்பத்தை பிரித்த பிரேமலதாவை கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி அவரை கத்தியால் நான் குத்திக்கொலை செய்தேன் என வாக்குமூலத்தில் தெரிவித்தார்.

குடும்பத்தை பிரித்ததால் அண்ணியை கொழுந்தன் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்