< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது - நகை, பணம் பறிமுதல்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது - நகை, பணம் பறிமுதல்

தினத்தந்தி
|
7 Sept 2022 2:59 PM IST

கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் கடப்பாரையுடன் சுற்றியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனை தடுக்கும் விதத்தில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கூடுவாஞ்சேரி போலீசார் நந்திவரம் அரசு கால்நடை ஆஸ்பத்திரி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கையில் சிறிய கோணிப்பையுடன் சந்தேகப்படும்படி நடந்து வந்து கொண்டிருந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினார்.

இதனையடுத்து அவர் கையில் வைத்திருந்த கோணி பையை பரிசோதித்த போது சிறிய கடப்பாரையை கையில் வைத்திருந்தார். இதனையடுத்து அந்த நபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரித்தபோது அவர் சென்னை பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 43) என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ.25 ஆயிரம், 1½ பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீகாந்த்திடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்