சென்னை
மனைவியை பார்க்க அனுமதிக்காத ஆத்திரத்தில் பெண்கள் பாதுகாப்பு மைய உரிமையாளரை மிரட்டியவர் கைது
|அம்பத்தூர் அருகே மனைவியை பார்க்க அனுமதிக்காத ஆத்திரத்தில் பெண்கள் பாதுகாப்பு மைய உரிமையாளரை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பழனி (வயது 43). கூலி வேலை செய்து வருகிறார். இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவரது மனைவி கடந்த சில மாதங்களாக அண்ணா நகரில் இயங்கி வரும் பெண்கள் பாதுகாப்பு மையத்தில் தங்கி வருகிறார். இதையடுத்து மனைவியை வீட்டிற்கு வருமாறு கூறி பழனி பெண்கள் பாதுகாப்பு மையத்திற்கு சென்று தகராறு செய்து கண்ணாடியை உடைத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பழனி மீண்டும் தனது மனைவியை பார்க்க முயன்றபோது பெண்கள் பாதுகாப்பு மையத்தின் உரிமையாளர் சஜிதா (40) என்பவர் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பழனி சஜிதாவுக்கு போன் செய்து ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். அதை தொடர்ந்து திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.