திருவள்ளூர்
வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது
|வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
வீட்டுமனை
செங்குன்றம் அடுத்த மொண்டியம்மன் நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 53). இவர் பொன்னேரி அடுத்த சோழவரம் நியூ சன் சிட்டி என்ற இடத்தில் 2 வீட்டு மனைகளை வாங்குவதற்காக சென்னை சவுகார்பேட்டை ராமானுஜர் ஐயர் தெருவை சேர்ந்த நரேந்திர குமார் சொர்டியா (48) என்பவரை அனுகியுள்ளார். அப்பொழுது நரேந்திர குமார் சொர்டியா ரூ.50 லட்சம் பணத்தை ராமநாதனிடமிருந்து பெற்றுக் கொண்டு 2 மனைகளையும் கிரையம் செய்து கொடுக்காமல் பல வருடங்களாக ஏமாற்றி வந்ததாக தெரிகிறது.
கிரையம் செய்து கொடுக்கவில்லை
இதையடுத்து ராமநாதன் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நரேந்திர குமார் சொர்டியாவை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்பொழுது வேறு ஒரு இடத்தில் உள்ள 5 மனைகளை எழுதி தருவதாக ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதையும் ராமநாதனுக்கு கிரையம் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த ராமநாதன் நரேந்திர குமார் சொர்டியாவிடம் சென்று எனக்கு மனைகள் வேண்டாம் தான் கொடுத்த ரூ.50 லட்சம் பணத்தை கொடுத்தால் போதும் என்று கேட்டுள்ளார். அதன் பேரில் நரேந்திர குமார் சொர்டியா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை கொடுத்துவிட்டு மீதி பணத்தை பின்னர் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து ராமநாதன் ரூ.4 லட்சத்தை வங்கியில் செலுத்தியபோது வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி விட்டது.
கைது
இதையடுத்து சோழவரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்பொழுது ரூ.46 லட்சத்திற்கான ஒரு காசோலையை கொடுத்துள்ளார் அந்த பணமும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராமநாதன் இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் பெருமாள் ஆலோசனைப்படி, உதவி கமிஷனர் கந்தகுமார் மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு நேற்று மோசடியில் ஈடுபட்ட நரேந்திர குமார் சொர்டியாவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி படுத்தி சிறையில் அடைத்தனர்.