திருவண்ணாமலை
ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்தவர் கைது
|ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குதாரராக சேர்ப்பதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணிடம் ரூ.8¾ லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் தொழில்
செங்கம் தாலுகா செ.சொர்ப்பனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மண்ணார் என்பவரின் மனைவி குப்பம்மாள் (வயது 61). இவர் தமிழ்நாடு குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு தண்டராம்பட்டு வட்டாரத்தில் அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தண்டராம்பட்டை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர் மூலம் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கீழ்பென்னாத்தூர் தாலுகா கீழ்கரிப்பூர் கிராமத்தை சேர்ந்த ஜாய்ஸ்உமா (39) என்பவர் அறிமுகமானார்.
அப்போது ராஜேஸ்வரியும், ஜாய்ஸ்உமாவும் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறோம். அதில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.
எனவே, ரியல் எஸ்டேட் தொழிலில் எங்களுடன் பங்குதாரராக சேர்த்து கொள்ளுமாறு குப்பம்மாளிடம் ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பி அவர் பல தவணைகளில் அவர்களிடம் நேரடியாகவும், வங்கி மூலமாகவும் மொத்தம் ரூ.8 லட்சத்து 93 ஆயிரம் கொடுத்து உள்ளார்.
பணம் மோசடி
பின்னர் அவர்கள் இருவரும் குப்பம்மாளை ரியல் எஸ்டேட் தொழிலில் பங்குதாரராக சேர்க்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி தராமலும் பல காரணங்களை கூறி ஏமாற்றி வந்து உள்ளனர்.
மேலும் அவர்களிடம் குப்பம்மாள் பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது, அவர்கள் பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து குப்பம்மாள் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனு குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஆசை வார்த்தை கூறி குப்பம்மாளிடம் பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் பணத்தை மோசடி செய்த ஜாய்ஸ்உமாவை கைது செய்தனர். மேலும் ராஜேஸ்வரியை தேடி வருகின்றனர்.