விழுப்புரம்
சென்னை சட்டக்கல்லூரியில் படிக்க இடம் வாங்கித்தருவதாக கூறி நண்பரிடம் ரூ.3.68 லட்சம் மோசடி செய்தவர் கைது
|சென்னை சட்டக்கல்லூரியில் படிக்க இடம் வாங்கித்தருவதாக கூறி நண்பரிடம் ரூ.3.68 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள மல்ராஜன்குப்பத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (வயது 32). நரையூர் காலனியைச் சேர்ந்தவர் சுபாஷ் (30). இவர்கள் இருவரும் பள்ளியில் படிக்கும்போது இருந்தே நண்பர்கள் ஆவர். இந்நிலையில் சுபாஷ், தனது நண்பர் அரிகிருஷ்ணனிடம் சென்று, தனக்கு சென்னையில் எல்லோரையும் தெரியும் எனவும் உனக்கு சென்னை சட்டக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அரிகிருஷ்ணன், கடந்த 2022-ம் ஆண்டு முதல் சிறுக, சிறுக ரூ.3 லட்சத்து 68 ஆயிரத்தை சுபாஷிடம் கொடுத்துள்ளார். பணத்தைப்பெற்ற சுபாஷ், இதுநாள் வரையிலும் அரிகிருஷ்ணனுக்கு சென்னை சட்டக்கல்லூரியில் படிப்பதற்கு இடம் வாங்கித்தராமலும், வாங்கிய பணத்தை திருப்பித்தராமலும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.
கைது
இந்த சூழலில் நேற்று காலை அரிகிருஷ்ணன், தனது நண்பர் சுபாசிடம் சென்று, தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சுபாஷ், அரிகிருஷ்ணனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அரிகிருஷ்ணன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுபாசை கைது செய்தனர்.